தமிழ் மக்கள் ஒரு குடையின் கீழ் நின்று, புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கு ஐந்து வருட காலத்தினுள் தீர்வினை எட்டக்கூடிய அளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை கொண்டு செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெயிலி வீதியில் தேர்தல் பிரசாரப்பணிகள் தொடர்பாக ஆதரவாளர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வடக்கு கிழக்கில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த நாங்களும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்றோம் தமிழர்களின் அபிவிருத்திக்கு இருக்கின்றோம் என்று கூறி தேர்தலில் களமிறங்கியுள்ளன.
வடக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் மாற்றுக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டால் தமிழர்களாகவே இருப்பார்கள். ஆனால் கிழக்கு மாகாணத்தில் மாற்றுக்கட்சிகளில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவது மிகவும் குறைவாகும்.
கடந்த 2010ஆம் ஆண்டு கூட யாழ் மாவட்டத்தில் மாற்றுக்கட்சியினை சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் கிழக்கு மாகாண மக்கள் இன உணர்வுடனும் அரசியல் அபிலாசைகளுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனேயே கைகோர்த்திருந்தனர்.
ஆனால் ஒரு அபாயமான சூழ்நிலை கிழக்கு மாகாணத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் சிறு குழுக்களாக அரசியல் கட்சிகளாக பெரும்பான்மை கட்சிகளினூடாக இன்னுமொரு சாராருக்கு பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கும் வாக்கு சேகரிக்கும் இயந்திரமாகவே இருந்து வந்துள்ளனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு 4700 வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு குறைவாக கிடைத்திருந்தால் அதிகளவில் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் நிலைமை மாறி ஒரு பாராளுமன்ற உறுப்பினரை மட்டும் பெற்றிருக்க வேண்டிய நிலையேற்பட்டிருக்கும்.
2010ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி படகு சின்னத்தில் தனியாக களமிறங்கினர். அதன்போது 14 ஆயிரம் வாக்குகளை பெற்றனர். அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கேட்டிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓரு பிரதிநிதித்துவத்தையே பெற்றிருக்க வேண்டிய சூழ்நிலையேற்பட்டிருக்கும். அன்றையிலையில் நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். இதனை நாங்கள் இன்றைய நிலையை கொண்டு உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.அந்த நிலைமையை நாங்கள் மீண்டும் ஏற்படுத்துவதற்கு அனுமதிக்ககூடாது.
கடந்த ஜனாதிபதியின் கொடுங்கோல் ஆட்சியை மாற்றவேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு எடுக்கும் முன்பே மக்கள் முடிவுவெடுத்து பெருமளவான மக்கள் வாக்களித்தனர். அந்த நிலைமை இந்த தேர்தலில் இருக்க வேண்டும். நாங்கள் காலம் காலமாக உரிமை
உரிமை என்று கூறிக்கொண்டிருக்காமல் எமக்கு உரிமை முக்கியம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலைக்கு எமது அபிலாசைகள் மேலும் மேலும் மேலும் தள்ளிச்செல்லாமல் இருக்கவேண்டும். தமிழ் மக்கள் ஒரு குடையின் கீழ் நின்று புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கு ஐந்து வருட காலத்தினுள் தீர்வினை எட்டக்கூடிய அளவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினை கொண்டு செல்லவேண்டும் என மக்களை வினயமாக கேட்டுக்கொள்கிறேன்
0 Comments:
Post a Comment