தீர்வை வரியற்ற மோட்டார் சைக்கிள் பெறுவதில் பிராந்திய செய்தியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஊடக அமைச்சு கவனம் செலுத்துமாறு கோரியும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம், ஊடக அமைச்சுக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக சங்கத்தின் தலைவர் அப்துல் சலாம் யாசீம் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது - தீர்வை வரியற்ற மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊடக அமைச்சு நாட்டிலுள்ள செய்தியாளர்களிடம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஆனாலும் அரசாங்க தகவல் திணைக்கள அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் அவ்வடையாள அட்டை இல்லாத பிரதேச, பகுதி நேர செய்தியாளர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்களை எதிர் நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலத்திரனியல் - அச்சு ஊடகங்களில் சேவையாற்றும் பிரதேச செய்தியாளர்கள் பலருக்கு அரசாங்க தகவல் திணைக்கள அடையாள அட்டை இல்லை. தனியார் ஊடக நிறுவனங்களால் தகவல் திணைக்கள அடையாள அட்டைகள் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் பிராந்திய செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, அரசாங்கத்தின் வரியற்ற மோட்டார் சைக்கிள் சகல செய்தியாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் தகவல் திணைக்கள அடையாள அட்டை கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்திக்கொள்ள ஊடக அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது .
அதன் பிரதிகள் ஜனாதிபதி அலுவலகத்துக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment