29 Apr 2015

சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

SHARE
மட்டக்களப்பு முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (28) வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபையின் நான்கு மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி வைபவரீதியாக திறந்து வைத்தார். இக்கட்டிடமானது நான்கு வகுப்பறைகளையும்  அதிபர் அலுவலகத்தையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் – 01 முதல் தரம் – 05 வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
பாடசாலை ஆரம்பிக்கப்ட்ட காலமிருந்து, இதுவரை மாணவர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பலநோக்கு மண்டபத்திலும் தற்காலிக கொட்டில்களிலும் மரநிழல்களிலும்  மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலை கட்டிடம் இல்லாத அச்சூழலிலும் முதன்முதலாக கடந்த வருடம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பரீட்சையில் 27 மாணவர்கள் தோற்றி, அந்த 27 மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்ததுடன் அதில் 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்திபெற்று சாதனை படைத்திருந்தமையும் இங்கு எடுத்துக் காட்டத்தக்கது.

வித்தியாலய அதிபர் க.கிருபைராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் ஞா.சிறிநேசன் எஸ்.மகேந்திரகுமார் கே.ஹரிகரராஜ் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் மற்றும் இப்பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் ஆசிரியர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கிராம அமைப்புக்களின் அங்கத்தவர்கள் பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: