6 Apr 2015

ஐம்பதாயிரம் வீடுகளமைக்கும் திட்டத்தின் கீழ் 1 200 பேருக்கு வீட்டுக் கடன்

SHARE
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்  50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் அடிப்படையில் 1 200 பேருக்கு வீட்டுக் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (03) வெள்ளிக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் நடைபெற்றது.
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் இக்கடன் உதவி வழங்கப்பட்டது.

இதன்போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கருத்து தெரிவிக்கையில்- அரசியல்வாதிகள் கூறி மாற்றத்துக்காக  மக்கள் வாக்களிக்கவில்லை என்பதுடன்,  அவர்கள்  கூறிய விடயங்களையும்  மக்கள் கேட்கவில்லை. இந்த நாட்டில் மாற்றமொன்றை கொண்டுவரவுள்ளதாக மக்களே தெரிவித்தார்கள்.

கடந்தகால ஆட்சியாளர்களை வீழ்த்தப்போகின்றோம் என்பதை பொதுமக்களே தெரிவித்திருந்தார்கள். அவ்வாறான சிந்தனையில்   மக்கள் இருக்கமுடியுமாயின், குடும்பங்களில் மற்றும் வீடுகளில் ஏன் சிறந்த பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று கேட்க விரும்புகின்றேன்.

இதற்கு விடா முயற்சி வேண்டும். அது  வெற்றி தரும். இயலாது என்பது யாரிடமும் கிடையாது. போதைவஸ்து பாவனையிலிருந்து சமூகத்தை பாதுகாக்க சேண்டிய தார்மீகப் பொறுப்பு அனைவரிடமும் உள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தை பாதிக்கும் விடயமாக போதைவஸ்து  பாவனை உள்ளது. 

இந்த மாவட்டத்திலுள்ள  அரச தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உட்பட பிரதேச செயலாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: