5 Mar 2015

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

SHARE
-திருமலையில் ஜனாதிபதி தெரிவிப்பு-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் என பிரித்து நோக்காமல் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்படும் வளப்பங்கீட்டைப்போல் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நேற்று(03) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தின் போது அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனது 49 வருட அரசியல் வாழ்க்கையில் பல அரசியல் மேடைகளில் ஏறியுள்ளதாகவும் எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு மாகாணத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை போன்று வேறு எந்த கூட்டத்திலும் தாம் கண்டதில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

நேற்று காலை வடக்கிற்கு சென்று தனது அன்பான மக்களையும் அத்துடன் அரசியல் தலைவர்களையும் திணைக்கள தலைவர்களையும் சந்தித்ததாகவும் இதனால் அம்மக்களுடனான பிணைப்பு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இனங்களுக்கடையிலான சகோதரத்துவம் எற்பட வேண்டும் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் ஜனநாயகம் சுதந்திரம் பாதுகாக்கப்படல் வேண்டும் ஏற்படுத்தப்பட்ட புதிய யுகமானது பெயரளவில் காணப்படாமல் யதார்த்தமானதாக அமைய அனைவரும் அர்ப்பணிக்க வேண்டியது அவசியமாகும்.

கடந்த காலப்பகுதியில் பௌதீக ரீதியிலான அபிவிருத்தி செயற்பாடுகள் சகல மாகாணங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மக்கள் இதன் மூலம் மகிழ்ச்சி அடையவில்லை. மக்களது உள்ளங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படல் வேண்டியது அவசியமானது. வடக்கு தெற்கு என மக்களை ஒருபோதும் பிரித்து நோக்கமுடியாது. அனைவர் மத்தியிலும் மனிதாபிமானம் காணப்படல் வேண்டும்.

தேர்தல் காலத்தின் போது சிலர் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் இரகசியமான முறையில் கள்ள ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக போலிக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். இது பொய்யானது என்று இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் சிறைவாசம் அனுபவிக்கவும் நேர்ந்தது.

அதற்கு தமது வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன். எமது ஒப்பந்தங்கள் மனிதாபிமானம் அன்பு பாசம் கருணை ஆகியவைகளை சுமந்ததாக உள்ளங்களிடையே காணப்பட்டது. யாழ்ப்பாணத்திலே அமைக்கப்பட்டு வருகின்ற ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. 90 வீதமான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. சகல வேலைகளும் நிறைவடையும் போது 250 கோடி ரூபாய் செலவாகும்.

இம்மாளிகைக்கு தாம் வசிக்க செல்வதில்லை என்றும் அதனை மக்கள் மயப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு தேசிய அபிவிருத்திக்கு இன்றியமையாதது. எமது நாடு விவசாய நாடாகும். விவசாயத்துறையை முன்னேற்றுவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். கிழக்கு மாகாணம் தேசிய பால் உற்பத்திக்கு 17 வீத பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க காத்திரமான நடவடிக்கை குறுகிய நீண்டகால ரீதியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். போசாக்கின்மை வறுமை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இவற்றை கவனத்திற் கொள்வது அவசியமாகும்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் அவர்கள் நம்பிக்கையோடு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். தாம் விசுவாசம் உடையவனாக இருப்பேன் என்றும் அதனடிப்படையில் செயற்படுவேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்கள் அச்சம் சந்தேகம் இன்றி வாழ நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். அதன் மூலம் நாடு என்றடிப்படையில் முன்னேற முடியும். கிழக்கு மாகாணம் இன அடிப்படையில் முக்கியம் பெற காரணம் இங்கே தமிழர் சிங்களவர் முஸ்லிம் என்றடிப்படையில் பரந்து வாழ்வதே ஆகும்.

அத்துடன் இன்று கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கத்தை போன்ற முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது முக்கியமான அம்சமாக காணப்படுகின்றது. மக்கள் பிரச்சினைகளை தேவைகளை நிறைவேற்றும் பல நிறுவனங்கள் அரசியலமைப்பு மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை மூலம் சரியான பயன்களை பெறுகின்றோமா என்பதனை சிந்திக்க வேண்டும்.

அமைச்சர் மற்றும் உறுப்பினர் பதவிகள் என்பது தமது சொந்த சுக போகங்களை அனுபவிப்பதற்கல்லாமல் மக்கள் பிரச்சினைகள் உட்பட விலங்கினங்கள் மற்றும் இயற்கையின் தேவைகளையும் நிறைவேற்றுவதாக அமைய வேண்டும். இவற்றை புரிந்து கொள்ளாமல் செயற்படுவதனால்தான் அரசியல் கலாசாரம் மாறுபட்டுள்ளதாக அமையவும் அரசியல் வாதிகள் மக்களின் வெறுப்பிற்கு உட்படவும் காரணமாக அமைகின்றது.

தாம் திருகோணமலைக்கு வந்தது சகோதரத்துவத்தையும் அன்பையும் ஏற்படுத்தவே அன்றி நீண்ட கலந்துரையாடலுக்கு அல்ல என்றும் தமது உறவினர் வீட்டுக்கு வந்ததைப் போன்ற உணர்வு தமக்கு ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இதன் போது தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன, கிழக்க மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண முதலைமச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்புபடை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
bnbnbnbvvb


SHARE

Author: verified_user

0 Comments: