23 Feb 2015

உலகக்கிண்ணப் போட்டியில் முதலாவது வெற்றியைப் பெற்ற இலங்கை அணி

SHARE
நடைபெற்று வரும் 11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 12 ஆவது போட்டியில் இலங்கை அணி, 4 விக்கெட்டுக்களால் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின் ‘ஏ’ பிரிவில் டுனெடினில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 1996ஆம் ஆண்டு சம்பியனான  இலங்கை அணி அறிமுக அணியான ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பேடுத்தாடிய முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முழுமையான ஓவர்கள் விளையாட முயற்சி செய்தது. எனினும் ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணிக்கு 233 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியில் அஷ்கார் அதிகப்பட்சமாக 54 ஓட்டங்களை எடுத்தார். இதனையடுத்து இலங்கை அணி  துடுப்பெடுத்தாடியது. திரிமன்ன, டில்சான் ஆகியோர் முதல் பந்திலே எவ்வித ஓட்டங்களும் பெறாது ஆட்டமிழந்தனர். அறிமுக அணியான ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இரண்டு பந்துகளிலே இரண்டு விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தது.

ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சு இலங்கை அணியை சற்று எச்சரிக்கும் விதமாகவே காணப்பட்டது. ஆனால் அனுபவம் வாய்ந்த இலங்கையின் நட்சத்திர வீரர் மஹேலவிடம், ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு எடுபடவில்லை.  இருப்பினும் இலங்கை அணிக்கு ஆப்கானிஸ்தான் நெருக்கடி கொடுத்தது. இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. இலங்கை அணியில் ஜெயவர்தன சதம்அடித்து அணியை சரிவு பாதையில் இருந்து மீட்டார். அவர்  ஒருநாள் அரங்கில் தனது 19 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 118 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 ஆறு ஓட்டம் அடங்கலாக இந்த சதத்தை பெற்றார். உலகக் கிண்ணத் தொடரில் இவர் பெற்ற நான்காவது சதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மெத்யூஸ் 44 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.  அணி 48.2 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியாக ஜீவன் மெண்டிஸ் 9, பெரெரா 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ஹமித் ஹசன் அதிகப்பட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: