மருதமுனை பொது நூலகத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் மூத்த துணைத் தலைவருமான மர்ஹூம்
மருதுர்க்கனியின் பெயரை சூட்டுவதற்கு கல்முனை மாநகர சபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை மாநகர
முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றபோது
மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி இதற்கான பிரேரணையை சமர்ப்பித்தார்.
அவர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கூறியதாவது;
“மருதமுனை நூலகத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான கவிஞர் மருதுர்கனி
எனப்படும் மறைந்த யூ.எல்.எம்.ஹனீபா ஆசிரியர், தான் வாழ்ந்த மருதமுனை
கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்ததோடு மட்டுமல்லாமல்,
சமூகப் பணிகளையும் மேற்கொண்டமைக்காக அன்னாரை கௌரவிக்க அவரது பெயரை மருதமுனை
பொது நூலகத்துக்கு சூட்ட வேண்டும் என முன்மொழிகின்றேன் .
தனது பாராளுமன்ற பதவிக் காலத்தில் தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியில்
90 வீதத்தை தான் நேசித்த மருதமுனைக்கு அவர் ஒதுக்கியதுடன் பொது நூலகத்தின்
கட்டிடப் பணிகளுக்கும் அதிகமான நிதியினை ஒதுக்கியிருந்தார்.
சிறந்த வாசகனாகவும் கவிஞனாகவும் இருந்த மருதூர்க்கனி, மரணித்த பின்பும்
அவரது பிள்ளைகளினால் மருதுர்க்கனி ஞாபகார்த்த கல்வி மேம்பாட்டு நிலையம்
எனும் பெயரில் அமைப்பொன்று நிறுவப்பட்டு ஏழை மாணவர்களுக்கு இலவசமாக
வகுப்புகளும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆகையினால் மருதமுனை பொது நூலகத்திற்கு மருதுர்க்கனி ஞாபகார்த்த பொது
நூலகம் என்ற பெயரை சூட்ட வேண்டும் என எமது பிரதேச புத்திஜீவிகள் கூட்டாக
வலியுறுத்துகின்றனர். அதற்கு கல்முனை மாநகர சபை அங்கீகாரம் வழங்க வேண்டும்”
என வேண்டுகோள் விடுத்தார்.
பிரேரணையை வழி மொழிந்து உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர்;
அரசியலுக்கு தன்னை அறிமுகம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப
போராளியான மருதுர்கனி அவர்களின் பெயரை மருதமுனை பொது நூலகத்துக்கு இட
வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு தனது பூரண ஆதரவை
தெரிவிப்பதாகவும் எத்தனையோ நல்லவர்களை உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் சில
கட்டாக்காலிகளுக்கும் முகவரிகளைப் பெற்றுக் கொடுத்ததாகவும் இவர்களுக்கு
மத்தியில் தான் மரணிக்கும் வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில்
இணைந்திருந்து இக்கட்சிக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவையை யாராலும் மறக்க
முடியாது என்றும் தெரிவித்தார்.
மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத்,
உறுப்பினர் ஏ.எம்.றக்கீப் ஆகியோரும் குறித்த நூலகத்திற்கு
மருதூர்க்கனியின் பெயரை சூட்டுவதற்கு முன்மொழியப்பட்ட பிரேரணையை வரவேற்று
மருதூர்க்கனியின் அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து விபரித்து
உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து பிரேரணை சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டதுடன்
குறித்த நூலகத்திற்கு ” மருதூர்க்கனி ஞாபகார்த்த பொது நூலகம்” என்று பெயர்
சூட்டுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்வர் நிஸாம்
காரியப்பர், மாநகர சபை செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
0 Comments:
Post a Comment