முல்லைத்தீவில் வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் நான்கு பிரதிக்
கல்விப்பணிப்பாளர்கள் ஏனைய உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் இருக்கக்கூடியதாக
நிர்வாக உத்தியோகத்தர் கல்வி அமைச்சுச் செயலாளரின் அறிவுறுத்தல்களையும்
மீறி தொழிற்படுவதாக தமக்கு புகார்கள் கிடைத்துள்ளதாக இலங்கைத் தமிழர்
ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியல் பிற்புலத்துடன் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இவர்
தமது பணிகளுக்கு அப்பால் சென்று அதிபர்கள், ஆசிரியர்களை
அச்சுறுத்துவதாகவும் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள் அஞ்சி நடுங்குவதாகவும்
கூறப்படுகின்றது.
வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருடைய பல பணிப்புரைகளை இவர் உதாசீனம்
செய்துள்ளதோடு அதிபர்கள், ஆசிரியர்களின் இடமாற்ற விடயங்களில் இவர் அரசியல்
பாணியில் நடந்து கொள்வதாகவும் அறியப்படுகின்றது.
இது தொடர்பில் வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் விரைந்து நடவடிக்கை
எடுக்கவில்லையெனில் தாம் தொழிற்சங்க ரீதியிலான நடவடிக்கைகளுக்குச்
செல்லப்போவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன்
அறிவித்துள்ளார்.
இவை தொடர்பாக கல்வி அமைச்சுக்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(tcn)
0 Comments:
Post a Comment