இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் உள்ள தேசிய
மனித வள அபிவிருத்திச் சபையின் மனிதவளத்தினை மேம்பாடடையச் செய்யுமுகமாக
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட செங்கலடிப் பிரதேச
செயலகத்தினை மாதிரியாகக் கொண்டு, மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலை
வாய்ப்புக்களுக்காகச் செல்லும் பெண்களின் பொருளாதார மற்றும் சமுக விளைவுகளை
கண்டறியும் ஒரு ஆய்வு கடந்த வாரம் தேசிய மனித வள அபிவிருத்திச் சபையினால்
மேற்கொள்ளப் பட்டுள்ளது .
இந்த ஆய்வின் முடிவுகளை விளக்கமளிக்கும் செயலமர்வொன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் செவ்வாய் கிழமை (09) நடைபெற்றது.
தேசிய மனித வள அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் இவ்வாய்வறிக்கையினை சமர்ப்பித்து விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் மேலும் செங்கலடிப் பிரதேச செயலத்தின் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், பல்கலைக்கழக விரிவுரையாளர் க.சுரேஸ், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொறுப்பதிகாரிள், உட்பட அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், கிராம சேவகர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி ஆய்வின் முடிவுகளுக்கான மாவட்ட ரீதியிலான பரிந்துரைகள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக தேசிய மனித வள அபிவிருத்திச் சபையின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் தெரிவித்தார்.
தற்போது இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுகின்றவர்களிடையே 48 விகிதமானவர்கள் பெண்கள், 2013 ஆம் ஆண்டின் தகவலின் அடிப்படையில் சுமார் 6.7 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு வருமானமாக உழைத்து இலங்கைப் பொருளாதாரத்துக்கு இவர்கள் கணிசமான பங்களிப்பினை செய்துள்ளனர். இரந்தபோதிலும், அவர்களில் பலர் பல்வேறுபட்ட வன்முறைகளுக்கும், ஆளாகி நாளாந்தம் அல்லல் படுகின்றனர்.
அவர்களது குடும்பங்கள் நிர்கதியாகி வருகின்ற நிலமையினையுமே நாளாந்தம் ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். இதன்போது சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வறிக்கை தேசிய ரீதியிலான கொள்கை மாற்றத்துக்கான ஆரம்பப் படியாக அமையும் எனவும் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment