3 Dec 2014

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் செயற்றிறன் குன்றிக் காணப்படுகிறது - ஜெமீல் எம்.பி.சி

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் செயற்றிறன் குன்றிக் காணப்படுகிறது. இந்நிலை நீடிக்குமானால் முதலமைச்சருக்கு தொடர்ந்தும் எம்மால் ஒத்துழைக்க முடியாமல் போகும் என்று கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் இடம்பெற்ற இந்த பட்ஜெட் அமர்வில் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உட்பட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
அங்கு மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் மேலும் பேசுகையில் கூறியதாவது;
"முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள பாலர் பாடசாலைப் பணியகம் கூட தற்போது மிகவும் மந்த கதியில் செயற்படுகிறது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இப்பணியகம் முடங்கிக் கிடக்கிறது. 
முன்னாள் முதலமைச்சர் காலத்தில் இப்பணியகம் உருவாக்கப்பட்டு- அதன் பணிகள் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இப்போது அந்த நிலையை எம்மால் அவதானிக்க முடியவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயம். 
இது விடயத்தில் முதலமைச்சர் கூடிய கவனம் செலுத்தி- இப்பணியகத்தை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
இங்கு சமர்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் பல குறைபாடுகள் இருப்பதை எம்மால் உணர முடிகிறது. இதனை முதலமைச்சர் அறிந்துள்ளாரோ தெரியாது. இவ்விடயத்தில் அவர் தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறார் என்று நான் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று தேசிய அரசியலில் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் எமது மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மூவின மக்களையும் திருபதிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். 
எமது கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் பிச்சைப் பாத்திரம் ஏந்துவதற்கு இங்கு வரவில்லை. அவர்கள் அமைச்சுப் பதவியை அலங்கரிப்பதற்காக நியமிக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் எமது கட்சியின் தீர்மானத்தை ஏற்று செயற்படுவதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர்.
அதேவேளை எமது முதலமைச்சர் செயலகம் இந்த மாகாண சபையில் மிகவும் சிறப்பாக செயற்பட வேண்டியதொரு பிரதான பிரிவாகும். ஆனால் இரு வருடங்களுக்கு மேலாகியும் அது அவ்வாறு செயற்படுவதாக நாம் காணவில்லை. செயற்றிறன் குன்றிய நிலையிலேயே அது காணப்படுகிறது.
இக்குறைபாட்டை முதலைமைச்சர் உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் எமது ஒத்துழைப்பை முதலமைச்சர் தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியாது என்பதை இந்த சபையில் மிகவும் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
இங்கு உரையாற்றிய உறுப்பினர் ராஜேஸ்வரன் கல்முனை மாநகர சபையில் தமிழர்களுக்கு அநீதியிழைக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். ஆனால் இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். 
நிதிக் குழுவுக்கு வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுள் தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்படவில்லை என்பதை வைத்துக் கொண்டு அவ்வாறான கூற்றை இந்த சபையில் முன்வைக்க முடியாது. அவர் இக்கூற்றை வாபஸ் பெற பேண்டும்.
அதேபோன்று கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்படுகின்ற நியமனங்களில் இன விகிதாசாரம் பேணப்படவில்லை என்று இங்கு கூறப்பட்டது. இதுவும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டாகும். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நியமனங்களையும் இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனங்களையும் புள்ளி விபரங்களுடன் ஆராய்ந்து உண்மையை கண்டறிய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: