25 Dec 2014

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: 35 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

SHARE
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 35 மில்லியன் ரூபாவை மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினால் நாட்டின் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 5 இலட்சம் பேர் அகதிகளாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை பீகொக் பீச் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள கவுடுல்ல மற்றும் மின்னேரியா ஆகிய குளங்களின் அணைக்கட்டுகள் உடைந்து செல்லும் அபாயத்தில் உள்ளன. இதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பிரதேசங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தினால் நாடு முழுவதும் 78,527 குடும்பங்களைச் சேர்ந்த 288,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22,369 பேர் 154 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் சகல நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

வரட்சியின் போது குளங்களிலிருந்த சேறுகள் அகற்றப்பட்டு துப்புரவு செய்யப்பட்டதன் காரணமாக தற்போது சகல குளங்களிலும் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இலங்கை மின்சார சபை இலாபமீட்டி மின் கட்டணத்தை மேலும் குறைத்து கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். தற்போது நாட்டில் எவ்வாறான அனர்த்தங்கள் நிகழ்ந்தாலும் அதற்கு முகம் கொடுத்து மக்களை காப்பாற்ற எமது அமைச்சு தயார் நிலையில் உள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் நிலை உள்ளது. மக்களை பாதுகாத்து மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: