1 Dec 2014

SHARE
ஆட்கொலை செய்ய எத்தனித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 18 வருடங்களாகத் தலைமறைவாகியிருந்த நபரைத் தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டிக்களிப் பிரதேசத்தில் வைத்து வீட்டில் தலைமறைவாகி இருந்த போது நேற்று சனிக்கிழமை(29) பிற்பகல் சுப்பிரமணியம் சுதேஷ்குமார் என்ற இந்த நபர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் கூறினர்.

ஆட்கொலை செய்ய எத்தனித்த வழக்கில் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டு 2003 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையிலேயே இவருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆட்கொலை செய்ய எத்தனித்த முறைப்பாட்டின் அடிப்படையில் 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவர், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் 1996 ஆம் ஆண்டு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அதன் பின்னர் அவர் நீதிமன்ற விசாரணைகளுக்குச் சமூகமளிக்காத நிலையில் தலைமறைவாகி இருந்து வந்ததாக ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தினால் பகிரங்கப் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவான நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமறைவான இந்த நபர் சுப்பிரமணியம் சுதேஷ்குமார் என்ற இயற் பெயரை சுப்பிரமணியம் சுதேஷ்பிள்ளை என்று பெயர் மாற்றம் செய்து நடமாடித் திரிந்துள்ளதோடு மட்டக்களப்பு மட்டிக்கழியில் இரண்டாவது திருமணம் செய்து குடித்தனமும் நடத்தி வந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரமவின் பணிப்புரைக்கமைவாக மேற்படி தலைமறைவு நபரைத் தேடும் பணியில் ஏறாவூர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஹிரான் செனவிரட்ன, பொலிஸ் அதிகாரிகளான ஆர். புருஷோத்தமன், அபேசிங்ஹ, திஸ்ஸநாயக்க ஆகியோரடங்கிய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: