1 Dec 2014

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொது பல சேனாவின் ஏஜென்டா?: கேள்வி எழுப்புகிறார் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின்

SHARE
 ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி:

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பொது பல சேனாவின் ஏஜென்டா? என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் கேள்வி எழுப்பியுள்ளார். 

‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம்கள் வரிந்துகட்டிக்கொண்டு வாக்களிப்பதன்மூலம் பொது பல சேனாவிற்கு சாட்டையடி கொடுக்கவேண்டும்’ என்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கூற்று தொடர்பில் வினவப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்தபோது,
“ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நாட்டின் நலன்கருதியும் ஜனநாயகத்தை வளப்படுத்தவும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் பல தரப்பினரும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு முன்வந்திருக்கிறார்கள்.

அவர் கடைப்பிடிக்கின்ற கொள்கைகள், முன்வைக்கின்ற கருத்துக்கள், வழங்கியிருக்கின்ற வாக்குறுதிகள் என்பன நல்லாட்சிப் பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. நல்லாட்சியை விரும்புகின்ற பலரும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து வெளிநடப்புச் செய்து மைத்திரிபால சிறிசேனவோடு அணி சேர்கின்றார்கள்.

இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி, விழி பிதுங்கி, புத்தி சுவாதீனமற்றவர்கள் போன்று பிதற்றுகின்றார்கள். அரசாங்கத்துக்கு இதுவரை வழங்கிய ஆதரவை விலக்கிக் கொள்வதற்கு நியாயமான பல்வேறு காரணங்கள் இருக்கின்ற சூழலிலும் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு வழங்குவதற்கு பல்வேறு நொண்டிச் சாட்டுக்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். புதிதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பது போன்று சந்திக்கின்றார்கள், அறிக்கைகள் விடுகின்றார்கள். இவர்களால் ஒருபோதும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைக் கபளீகரம் செய்யமுடியாது.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் ‘பொது பல சேனாவிற்கு சாட்டை அடி கொடுக்க வேண்டும் என்றால் முஸ்லிம்கள் மஹிந்தவிற்கு வரிந்துகட்டிக்கொண்டு வாக்களிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். சுமார் 200ற்கு மேற்பட்ட இனவாதச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட பொது பல சேனாவிற்கு சாட்டையடி எப்படிப் போனாலும் மகிந்த முறைத்துப் பார்க்கவே தயங்குகிறார்.

இந்த நிலையில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கணக்கு எப்படிச் சரிவரும். கணக்கு எங்கோ பிழைக்கிறதே! அமைச்சர் ஹிஸ்புல்லா ஜனாதிபதி மகிந்தவின் ஏஜண்டு என்பது எல்லோருக்கும் தெரியும், இப்போது மஹிந்தவைத் திருப்திப்படுத்த பொது பல சேனாவிற்கும் ஏஜென்டாக மாறிவிட்டார் போலும். பாவம் அவருக்கு அல்லாஹ் நேர்வழியைக் காட்டுவானாக.” என்று அஸ்மின் குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: