15 Nov 2014

பாடசாலை இடைவிலகலைத் தடுத்தல் தொடர்பான நடமாடும் விழிப்புணர்வு

SHARE
(சுந்தர்)

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சந்திவெளிக் கிராமத்தில் பாடசாலை இடைவிலகலைத் தடுத்தல் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு வழங்கும் வகையில் சிறுவர் உரிமைமேம்பாட்டு உதவியாளர் ஏ.ஆர்.எம். றுசைட்டின் தலைமையில் நடமாடும் விழிப்புணர்வு ஒன்று நேற்று வெள்ளிக் கிழமை (14) நடைபெற்றது.

இதில் கிராம உத்தியோகத்தர்கள், களஉத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சந்திவெளி கிராமமட்;ட குழுக்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உட்பட பலர் இணைந்திருந்தனர்.

இந்நடமாடும் விழிப்புணர்வின்போது இக்குறித்த பிரதேசத்தில் நீண்டநாட்களாக பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள 8 மாணவர்களும், பாடசாலை செல்வதில் ஒழுங்கீனமாக இருந்த 32 மாணவர்களும் இனங் காணப்பட்டனர்.

இவர்களுக்கான ஆலோசனைகள், மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப் பட்டதோடு, அவர்கள் கல்வி கற்று வந்த பாடசாலைகளுக்கும் மீள இணைக்கப்பட்டனர். இதில் மேலும் ஒருவரை தொழில் பயிற்சி நிலையத்திக்கும் இணைப்பதற்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இவ்விழிப்புணர்வின்போது பெற்றோர், மற்றும் ஏனைய பொதுமக்களுக்கும், சிறுவர்களுடைய உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதோடு, சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகம் ஏற்படும்போது தொடர்பு கொள்ள வேண்டிய முறைமைகள் பற்றியும்,  அம்மக்களுக்கு விளக்கமளிக்கப் பட்டதாக கோறளைப் பற்று தெற்கு பிரதேசசெயலக சிறுவர் உரிமைமேம்பாட்டு உதவியாளர் ஏ.ஆர்.எம். றுசைட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாணவர்களின் பாடசாலை இடைவிலகளைத் தடுத்து அவர்களுடைய அபிவிருத்தி, மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து முன்நெடுக்கப்பட்டு வருகின்மை குறிப்பிடத் தக்கதாகும்.








SHARE

Author: verified_user

0 Comments: