21 Nov 2014

அரசியல் தீர்வு வெறுமனே ஒரு பிரதேசத்துக்குரிய, மக்களுக்குரிய தீர்வாக இருக்கமுடியாது என்று ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

SHARE
அரசியல் தீர்வு வெறுமனே ஒரு பிரதேசத்துக்குரிய, மக்களுக்குரிய தீர்வாக இருக்கமுடியாது என்று ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

கிழக்கைப் போன்று வடக்கு,  மலையகம், ஏனைய பிரதேசங்களிலும் வாழ்கின்ற  தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு சரியான திட்டத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது தமிழர்கள் அனைவரின் கடமையாகும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் வியாழக்கிழமை (20) அறிவிக்கப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தன் மூன்றாவதுமுறை மக்கள் ஆணைக்காக மக்கள் முன் செல்வதற்கு  தயாராகவுள்ளார் என்ற விடயத்தை தேர்தல் ஆணையாளருக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.  அதேபோல், தேர்தலுக்கான தினம்; தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்படவுள்ளது.  இந்தக் காலத்தில் மக்கள் ஆணையை பெறவேண்டும். ஏனென்றால், கடந்த நான்கு வருடங்களில் பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதற்கெல்லாம் பதில் கூறும் வகையில் ஜனாதிபதி, மக்கள் முன் சென்று ஆணையை பெறவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைப்பது வரவேற்கத்தக்க விடயம்.

பலர் தங்களது கடைசி நாள் வரும்வரைக்குமிருந்துவிட்டு, அதற்குப் பின் முடிவெடுப்போம் என்ற நிலையில்லாமல், தனது 6 வருடங்களை பூர்த்திசெய்வதற்கு முன்னாலேயே மக்கள் ஆணையை பெறவேண்டும் என்று ஜனாதிபதி எடுத்த முடிவை நான் முழுமனதாக பாராட்டுகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்புத்தொகுதி கூட தயாராகவிருக்கின்றது. இந்நாட்டில் எமது மக்களின் தேவை என்ன என்பது குறித்து தெளிவாக விளங்கப்படுத்துவதற்கு தயாராகவுள்ளோம். மக்களும் தெளிவாகச் சிந்தித்து தங்களின் முடிவை வாக்குமூலம் காட்டவேண்டும் என்ற விடயத்தை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

அபிவிருத்தியை மட்டும் முன்வைத்து இந்த அரசு தேர்தலுக்காக போட்டியிடுகின்றது என்று இன்று பல எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதனை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அபிவிருத்தி இருந்தால்,  இந்த நாட்டின் தேவைகள் பூர்த்திசெய்யப்படும் என்ற விடயத்தை எவரும் மறுக்கமுடியாது.

அதேவேளை, அரசு கடந்த நான்கு வருடங்களில் முன்னெடுத்த விடயம் உட்கட்டமைப்பை இந்த நாட்டில் உருவாக்கவேண்டும். வீதிகள், மின்சார வசதி, பாலங்கள் போன்றவையெல்லாம் கட்டப்படவேண்டும். அதன் ஊடாக இங்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கமுடியும்.  முக்கியமாக தொழிற்சாலைகளை எமது நாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட திட்டத்திலேயே, இன்று மக்களின் வாழ்வாதாரத்துக்கு சரியான தீர்வை காணவேண்டும் என்ற விதத்தில் ஜனாதிபதி மக்கள் மத்தியில் சென்று கடந்த நான்கு வருடங்களும் உட்கட்டுமானத்தில் அபிவிருத்தியைச் செய்திருக்கின்றார். இனிவரும் 6 வருடங்கள் பொருளாதாரத்தில் மாற்றத்தை கொண்டுவரப்போகின்றேன்.

முக்கியமாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப்போகின்றேன் என்ற கருத்தை மக்கள் முன் வைக்க அவர் தயாராகவுள்ளார். 
எதிர்க்கட்சிகளின் உரிமைப் பிரச்சினை. மக்களுக்கு உரிமை தேவையில்லை என்று எவரும் சொல்லவில்லை. அது பேசித் தீர்க்கவேண்டிய விடயம். இதில் இன்று எடுத்துவிட்டோம். நாளை விழுத்திவிட்டோம் என்றெல்லாம் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவேண்டுமாக இருந்தால், இருசாராரும் இருந்து பேசி, பல விடயங்களை ஆராய்ந்து, அதன் மூலமாக ஒவ்வொரு பிரதேசத்துக்குமான தீர்வை காணவேண்டும் என்ற ஒரு யதார்த்தம் உள்ளது.

கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தின் படியான காணி, பொலிஸ் அதிகாரம் பாரிய விளைவை ஏற்படுத்தும். அதற்கு மாற்றீட்டை, எதிர்க்கட்சிகளும் தமிழ்த் தேசியம் கூட சிந்திக்க வேண்டும். ஏனென்றால், கிழக்கு மாகாணத்தில் 35 சதவீதமளவில் இருக்கும் தமிழர்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களை வெறுமனே மாற்றுச் சமூகங்களின் கைகளில் கொடுத்து கிழக்கு மாகாணத் தமிழர்களின் எதிர்காலத்தை பணயம் வைக்கமுடியாது.

அதற்கு மாற்றீடான அரசியல் கருத்தை, திட்டத்தை அனைவரும் முன்வைக்கவேண்டும். கிழக்கு மாகாணத் தமிழர்களின் பாராம்பரிய நிலங்கள் எப்படிப் பாதுகாக்கப்படப்போகின்றது என்பதற்கு ஒரு பதிலை கொடுத்துவிட்டு அரசியல் பேசவேண்டும். ஏனென்றால், கிழக்கு மக்கள் பாரிய நெருக்கடியில், சிக்கலுக்கு மத்தியில் வாழ்க்கையை முன்னெடுக்கின்றார்கள்' என்றார்.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: