19 Sept 2012

கிழக்குத் தேர்தலும் வெற்றியீட்டிய த.தே.கூ.வேட்பாளர்களும் சாடுகிறார் அரசை! கி.துரைராஜசிங்கம்

SHARE

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தெரிவான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தெரிவான வேட்பாளர்களை அரசாங்கத்திற்கு ஆதரசு வழங்குமாறு கோருவது ஜனநாயகத்திற்கு விடுக்கப்;பட்ட பாரிய அச்சுறுத்தல் என மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான கி.துரைராஜசிங்கம் விசனம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பாதுகாப்புக் குறித்தும் தேர்தல் ஆணையாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
இம்மாவட்டத்தில் தெரிவான வேட்பாளர்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் வெற்றிபெற்ற உறுப்பினர்களிடம் சிலர் வந்து வௌ;வேறு கருத்துக்களைக் கூறி கிழக்கு மாகாண சபையிலே அரசு அமைப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே பேசியிருக்கிறார்கள்
இவ்வாறான பேச்சு அவர்களை மிகவும் பீதியடையச் செய்துள்ளது. தங்களுடைய வெற்றி தொடர்பாக தங்களின் சந்தோசத்தில் ஈடுபட வேண்டிய, ஆதரவாளர்கள் வாழ்த்துக் கூற வர வேண்டிய, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில் குறித்த நபர்களின் இத்தகைய செயற்பாடு வெற்றி பெற்ற வேட்பாளர்களை பீதியடையச் செய்துள்ளது.
தொலைபேசிகளில் அழைப்புகளில்  கூட அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன்காரணமாக வருகின்ற தொலைபேசி அழைப்புகளும் இவ்வாறான அழைப்புகளாக இருக்குமோ? என்ற சந்தேகம் அச்சம் காரணமாக அந்த தொலைபேசி அழைப்புகளை தொடாமல் இருக்கும் அளவிற்கு பயமுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் வௌ;வேறு விதமாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய தூண்டப்படுகின்றோமோ? என்று அச்சுகின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இது உண்மையிலே சந்தோசமாக இருந்து தங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி யோசிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் எமது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுவது மிகப்பெரிய மனித உரிமை மீறல் மட்டுமல்ல  மிகப்பெரிய ஜனநாயக விரோத செயல் ஆகும். இது ஜனநாயகத்தை வேறுரொரு திசைக்கு திருப்பிச் செல்கின்ற நடவடிக்கையாகவே அமைகிறது. ஒரு ஜனநாயகத்தை மதிக்கின்ற நாட்டிலே இத்தகைய நடவடிக்கை ஒரு வெட்கப்பட வேண்டிய நடவடிக்கையாகவுள்ளது.
இதன்காரணமாக எமது வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இவர்களுடைய தொந்தரவு தாங்க முடியாமல் தமது வீடுகளிலே தங்கிருக்க முடியாமல் வேறு இடங்களில் தங்கிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை ஜனநாயகத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட பாரிய சவாலாகும்.
இந்த நாட்டில் ஜனநாயகம் மீண்டுள்ளது, ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், ஜனநாயகத்திற்கு உயிரூட்டுவோம் என்று கூறுபவர்கள் இப்படி நடந்துகொள்வது ஜனநாகத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது
வந்தவர்கள் அரசுக்கு சார்பாக நீங்கள் செயற்படும் வகையில் உங்களுடைய நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும் அதற்கு நாங்கள் தேவையான அளவிற்கு சன்மானங்கள் வழங்குவோம். நீங்கள் சந்தோசமாக இருக்கக் கூடிய வகையில் அந்த சன்மானங்கள் வழங்கப்படும். உங்களுக்கு உங்களுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கு அவ்வாறான சந்தோசங்களை செய்து விடலாம் என்ற ரீதியல் அவர்களுக்குச் சொல்லி மக்கள் வழங்கிய ஆணையை புறந்தள்ளுவதற்குத் தூண்டுவதும் ஒரு தவறான வழிக்கு தள்ளிச் செல்வதும் ஒரு ஜனநாயக விரோத செயல் என்றே கருதவேண்டும்.
எங்களது வெற்றி தொடர்பான விடயம் இன்றும் வர்த்தமானியிலே அறிவிக்கப்படாத காரணத்தினால் அந்த விடயம் தற்போது தேர்தல் ஆணையாளருக்கு உட்பட்டது. இதன் காரணமாகவே இவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து தேர்தல் ஆணையாருக்கு முறைப்பாடு செய்துள்ளேன். தேர்தல் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சம்பவங்களை விபரித்து இவர்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்குமாறு குறிப்பிட்டிருக்கின்றேன். எங்களது ஆறு உறுப்பினர்களுடைய பெயரை நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.
அந்த கடிதத்திலே இனந்தெரியாத பலர் எங்களது வெற்றி பெற்ற நான்கு உறுப்பினர்களை சந்தித்து கிழக்கு மாகண சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசுக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் தங்களோடு இணைந்து செயற்படும்படி இவர்களை தூண்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யாதவிடத்து அதனால் சில பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டும் என்ற ரீதியிலே அந்த உரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த சந்தர்பத்தில் எமது உறுப்பினர்களுக்கு தாங்கள் வேறு இடங்களுக்கு கடத்தப்படலாமே என்ற அச்சம் கூட எற்பட்டிருக்கிறது. அதைவிட உயிர் ஆபத்து ஏற்படலாமோ? என்றும் கூட அவர்கள் பயப்பட்டுள்ளார்கள்;. இந்த சந்தர்ப்பத்திலே அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது தேர்தல் ஆணையாளரின் கடமை என்பதனை அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

இந்த விடயத்தில் தேர்தல் ஆணையாளர் துரிதமாக செயற்பட்டுள்ளார் எனது இந்த கோரிக்கையை பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொணடுவந்துள்ளதாகவும் அவர் இது தொடர்பான நடவடிக்கைகைள எடுப்பார். என்னையும் அவருக்கு இது தொடர்பான கடிதமொன்றை அனுப்பிவைக்குமாறு என தேர்தல் ஆணையாளர் எனக்கு அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம் பொலிஸ் மா அதிபருக்கு இல்லாவிட்டாலும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பாதுகாப்பு முக்கியமானதென்றும் அவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கவேண்டியதன் அவசியம் பற்றியும் கடிதமொன்றை தொலை நகல் மூலம் அனுப்பிவைத்துள்ளேன்.
அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ள நான்கு பேர் மடடுமல்ல தெரிவு செய்யப்பட்ட ஆறு பேரின் பாதுகாப்புக் குறித்தும் அதில் சுட்டிக்காட்டியுள்ளேன். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஊடாக பிரதிப் பொலிஸ் மா அதிபரைத் தொர்பு கொண்ட போது பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல் எதிர்பார்க்கப்படுவதாக பதிலளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று எமது கட்சியிலிருந்து தெரிவான வேட்பாளர்களுக்கு இந்த அழுத்தத்தைக் கொடுப்பவர்கள் யார்? என்று தெளிவாக கூற முடியாவிட்டாலும்  அவர்கள் அரசாங்கத்தினால் அனுப்பட்ட தரகர்கள் அல்லது முகவர்களாக இருக்க வேண்டும். காரணம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அவர்கள் கோருவதால் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்தே இவர்கள் வழிநடத்தப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
SHARE

Author: verified_user