22 Feb 2023

கொட்டும் மழைக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட மகா சிவராத்திரி விழா நிகழ்வுகள்.

SHARE

கொட்டும் மழைக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட மகா சிவராத்திரி விழா நிகழ்வுகள்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளுக்கமைவாக கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப்பாடசாலைகள் ஒன்றியமும், கிண்ணையடி அருள்மிகு ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் இணைந்து நடாத்திய  மட்டக்களப்பு மாவட்ட மகா சிவராத்திரி விழா சனிக்கிழமை  (18.02.2023 இரவு வாழைச்சேனை கிண்ணையடி அருள்மிகு ஆதிலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கலை அரங்கில் கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் கிண்ணையடி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.மா.குலேந்திரரூப சர்மா, மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம், கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர். ஆர்.சிவகுமார், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.டுகேந்தினி  சிறிஸ்கந்தராசா, தமிழ் சைவ பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கலைவாணன் ஐயா,  இலண்டன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்ற மட்டக்களப்பு மாவட்ட சமூக நல தொண்டர் க.துரைராஜா மற்றும் இம்மன்றத்தின் உறுப்பினர்கள், கிண்ணையடி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், மகா விஸ்னு ஆலயம், மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், முத்துமாரியம்மன் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம் மற்றும்  கிராமமட்ட அமைப்புக்கள், கோறளைப்பற்று பிரதேச ஆலயங்களின் நிருவாகிகள், கலைமன்றங்கள், அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கண்விழித்து சிவன் இரவு முழுவதுமாக கலை நிகழ்வுகளை  பார்த்து ரசித்தனர்.

இந்நிகழ்வில் கிரான் கிறிஸ்தாலயா நடன கலைமன்றம், மட்டக்களப்பு  சிவசக்தி பஜனை மன்றம், கோறளைப்பற்று பிரதேச அறநெறிப்பாடசாலைகள், கலை மன்றங்கள், பாடசாலை மாணவர்களின் கரகாட்டம், கோலாட்டம், சிவதாண்டவம், புஸ்பாஞ்சலி, கதம்ப நடனம், வில்லுப்பாட்டு, நாடகம்,  சிவகீர்த்தனை, பரதநாட்டியம், நடனங்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சைவசமய பொது அறிவு வினாவிடைப்போட்டிகள்  நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளின் சிறப்பு சொற்பொழிவுகள் முதலான நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தன. மேலும் இந்நிகழ்வில் விசேட அம்சமாக மட்டக்களப்பு மாவட்ட சிவதொண்டர் திருக்கூடத்தினரால் ஆலயத்தில் விரதமிருந்த அடியார்களுக்கு உருத்திராக்கம் அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  இலண்டன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட சமூக நல தொண்டர் க.துரைராஜா ஐயா அவர்களால் இந்நிகழ்வினை தலைமைதாங்கி நடாத்திய கோறளைப்பற்று பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் அவர்களும், சிறப்பு அதிதியாக கலந்துகொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.  தொடர்ந்து  கலை நிகழ்வுகளில் பங்குபற்றிய கலைமன்றங்கள், அறநெறிப்பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள், நெறிப்படுத்திய ஆசிரியர்கள், மற்றும் சைவசமய பொது அறிவு போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கெரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


















SHARE

Author: verified_user

0 Comments: