10 Nov 2020

பிள்ளையான் மீதான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.

SHARE

பிள்ளையான் மீதான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

த.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை செவ்வாய்கிழமை (10) இடம்பெற்றது.

சிவில் மேல்முறையீட்டு  நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொரோனா சூழ்நிலை காரணமாக எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றிற்கு வருகை தராமையினால்  எதிர்வரும் 24ஆம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்துள்ளதுடன், ஏலவே மன்றின் உத்தரவின்படி எதிர்வரும் 16.11.2020 ஆந் திகதி நடைபெறவிருந்த வழக்கு விசாரணைகள் நடாத்தபட தேவையில்லையெனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கவேண்டாம் என அரசதரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரணினால்  முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டதுடன், சிறைச்சாலை ஆணையாளர் அனுமதி வழங்கினால் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் எனவும் நீதிபதி இதன்போது தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: