30 Sept 2019

முப்பது வருட கால யுத்தத்தில் வாழ்வியலின் அத்தனை சிறப்பம்சங்களையும் தொலைத்துவிட்டோம். உள நல வைத்திய நிபுணர் ரீ. கடம்பநாதன்.

SHARE
முப்பது வருட கால யுத்தத்தில் வாழ்வியலின் அத்தனை சிறப்பம்சங்களையும் தொலைத்துவிட்டோம். உள நல வைத்திய நிபுணர் ரீ. கடம்பநாதன்.
நாட்டில் முப்பது வருட காலம் இடம்பெற்ற விரும்பத் தகாத யுத்தத்தின் விளைவாக  யுத்தத்தில் வாழ்வியலின் அத்தனை சிறப்பம்சங்களையும் தொலைத்துவிட்டோம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட உள நல வைத்திய நிபுணர் ரீ. கடம்பநாதன்(Senior Psychiatrist Consultantதெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் இடம்பெற்ற அரச அலுவலகங்களில் கடமை புரிகின்ற உள நல ஆற்றுகையாளர்களுக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் சமூக மட்ட அமைப்புக்களில் பணிபுரிகின்ற செயற்பாட்டாளர்களுக்குமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு வார கால வதிவிடப் பயிற்சி நெறியில் திங்கட்கிழமை 30.09.2019 கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துப் பகிர்ந்து கொண்ட சிரேஷ்ட உள நல வைத்திய நிபுணர் கடம்பநாதன்;… 30 வருட கால யுத்தத்திற்குசுள் சிக்கிக் கொண்டு நாம் தொலைத்த வாழ்வியலின் அத்தனை சிறப்பம்சங்களையும் இனி புதிதாகத் தேட வேண்டியிருப்பதால் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஏனைய மாவட்டங்களைப்போல் மட்டக்களப்பு மாவட்டமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

30 ஆண்டுகால யுத்த வன்முறைகளுக்குள் அகப்பட்டுக் கொண்ட சமூகத்திற்கிடையில்  வெறுமனே சேவைகளைப் பரவலாக்குவதன் மூலமும் ஆளணியினரை அதிகரிப்பதன் மூலமும் மீளக் கட்டி எழுப்பி விட முடியுமா என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
இது ஒரு பெருஞ் சவாலான விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது.
எங்களுடைய உள சமூக ஆற்றுப்படுத்தலுக்கு அடிப்படையாகவுள்ள உள்ள குடும்பம் என்கின்ற அமைப்பு அந்தக் குடும்பத்தில் ஏற்படுகின்ற நிலைமைகள் சார்ந்த ஒரு போக்கு சவாலுக்குட்படும் ஒன்றாகத் தெரிகிறது.

நுகர்வுக் கலாச்சாரம் பல்வேறுபட்ட புதிய பழக்கவழக்கங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சில விடயங்கள் என்பளவெல்லாம் ஏற்கெனவே மிகவும் சவால்களுக்குள் உட்படுத்தப்பட்டுள்ள எங்களின் குடும்பங்களைப் பாதித்துள்ளன.

இந்த புதிய சவால்களையும் பழைய பாதிப்புக்களையும் ஈடு கொடுத்து முன்னேற்றக் கூடிய அளவுக்கு எமது திட்டமிடல்கள் அமைய வேண்டும்.

அதன்படி காரியமாற்ற வேண்டும்.
எங்களுடைய குடும்பங்களின் விடுபட்டுப்போன திறமைகளை வல்லமைகளை தேடவேண்டிய நிலைமையில் நாம் இருக்கின்றோம்.

அதேவேளை எமக்குள்ளே உள்ள பலவீனங்களையும் குறைபாடுகளையும் ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளையும் கண்டாக வேண்டும்.

அநேகமாக குடும்பங்களிலுள்ள எல்லோருமே ஒரு திறமைமிக்க உள ஆற்றுப்படுத்துநராக மாறவேண்டிய தேவை உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில்வாண்மையுடைய உளநல ஆற்றுப்படுத்துநர்களின் எண்ணிக்கை குறைவு.

குடும்ப அமைப்பை பேணி ஆரோக்கியமான பக்கத்துக்கு குடும்பங்களை மாற்ற வேண்டும் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகின்றது.

பாதிக்கப்பட்டுப் போயுள்ள மக்களின் பிரச்சினைகளைச் செவிமடுத்துக் கேட்பதற்கு ஆட்களில்லை.

பாரம்பரிய எமது கட்டுக்கோப்பான கூட்டு வாழ்க்கை முறையில் முன்னர் குடும்பங்களுக்குள் பரஸ்பர கலந்தாலோசனை பகர்ந்துகொள்ளுதல், இன்பதுன்பங்களில் பங்கெடுத்தல், ஓய்வு பொழுது போக்கு எல்லாமே இருந்தன.

ஆனால் தற்போதைய இயந்திர வாழ்க்கையோட்டத்தில் ஓடிக்கொண்டிருப்பதால் பரஸ்பர பகிர்ந்து கொள்ளலுக்கும் பங்கெடுத்தலுக்கும் நேரமில்லை. ஒருவரின் துன்ப துயரங்களில் பங்குபற்றக் கூட நேரமில்லாத நிலைமையில் வாழ்க்கை அமைப்பு முறை மாறிவிட்டிருக்கின்றது.

சமூகத்தில் பரம்பரை பரையாக கட்டிக்காக்கப்பட்டு வந்து கொண்டிருந்த பரஸ்பர பொறுப்புக் கூறலும் பாதுகாப்புப் பொறிமுறைகளும் மங்கி மறைந்து விட்டதால் தற்போது வாழ்வியல் முறையில் பல குழறுபடிகள் இடம்பெறுகின்றன.

அது உடல் உளத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே தொலைத்துவிட்ட வாழ்வியலின் சிறப்பம்சங்களைத் தேடவேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: