பெண்கள் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை பேசுகின்ற பெண் எழுத்தாளர்கள்
உருவாகி வருகிறார்கள்-தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்.
பெண்கள் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை பேசுகின்ற பெண் எழுத்தாளர்கள் இப்பொழுது சமூகத்தில் உருவாகி வருகிறார்கள், அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் வைத்தியர் ஜலீலா முஸம்மில் என தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தெரிவித்தார்.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றி வரும் இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், பன்னூலாசியரும், கவிஞருமான டொக்டர் ஜலீலாவின் ஆறாவது நூலான “சுவனத்து வைரம் நூலறிமுகமும் வெளியீடும் கடந்த வெள்ளிக்கிழமை(20.11.2026) மாலை ஏறாவூர் விவேகானந்தா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
சமகாலத்தில் பெண்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளையும், அதன் மூலம் ஏற்படுகின்ற சமூகச் சீரழிவுகளையும் சிலாகித்துப் பேசுகின்ற முக்கியமான கதைகளை வைத்தியர் ஜலீலா உருவாக்கியிருக்கிறார்.
சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளைப் பேசுகின்ற எழுத்தாளர்கள் வாழ வைக்கப்பட வேண்டும். அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு உதவு ஊக்கமளிக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும். எழுத்தாளர்களை காணாமல் ஆக்குகின்ற சமூகமாக நாம் இருந்து விடக் கூடாது. நல்ல சிந்தனையுள்ள எழுத்தாளர்களை உருவாக்குவதில் சமூகம் முன்னின்று உழைக்க வேண்டும்.
சமகாலத்தில் பிள்ளைகள் வளர்க்கப்படுகின்ற வழிமுறை மாறுபட்டிருக்கிறது. அதனால் இளஞ் சமுதாயத்தினரின் செல்நெறியில் பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது. சிறு குழந்தைகளை நவீன தொடர்பாடல் சாதனங்களைக் கொடுத்து பராக்குக் காட்டி வளர்க்கும் நவீன நாகரிம் வியாபித்துள்ளது. இளசுகள் இயற்கையோடு, மண்ணோடு விளையாடிய காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இப்பொழுது இலத்திரனியல் சாதனங்களோடு பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள்.
இன்று சமூகத்திலே இருக்கிற ஆகப் பெரிய பிரச்சினை தற்கொலை. உளநலக் குறைபாடு, மன அழுத்தங்கள், நெருக்கீடுகள் இதற்குக் கராணம் என்று உளவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இளம்பராய வளர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். தோல்வியையும், போட்டி மனப்பான்மையையும், அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் வளர்க்க வேண்டும். இயற்கையோடு இணைந்த மனித உறவுகளோடு இளந் தலைமுறையினரை வளர்க்க வேண்டும் இதற்கு எழுத்தாளர்களும், இன்னபிற துறைசார்ந்தவர்களும் விழிப்புணர்வூட்ட வேண்டும்.
ஆக்க இலக்கிய எழுத்தாளரான ஜலீலா, பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றிக் கொண்டு எழுத்தாற்றலால் சமூகத்தைச் சீரமைப்பதில் தனது பங்குக்குள்ள கடமைகளைச் செய்திருக்கிறார். அதனால் அவர் சரித்திரத்தில் பாராட்டப்படுவார்.” என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப்
பணிப்பாளர் மேனகா புவிக்குமார், மாகாண
சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் எம்.எஸ். நளீம் உட்பட
எழுத்தாளர்கள், இலக்கிய
ஆர்வலர்கள், கல்வியாளர்கள், வைத்தியர்கள்,
பாடசாலை அதிபர்கள்,
ஆசிரியர்கள், உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment