19 Nov 2026

மட்டக்களப்பபில் 8 பேருக்கு மரண தண்டனை கதறியழுத உதவினர்கள்.

SHARE

மட்டக்களப்பபில் 8 பேருக்கு மரண தண்டனை கதறியழுத உதவினர்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2008ஆம் ஆண்டு தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரில், 8 பேருக்கு மரண தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (19.11.2026) தீர்ப்பளித்துள்ளது.  

மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், வழக்கின் 9ஆவது எதிரியை விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி, தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவர் அப்போதைய செங்கலடி முகாமுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி உறுப்பினர்களால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 

கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது சடலம் புதைக்கப்பட்டு, அதன் மேல் வாழைமரம் நாட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாரால் ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், 2016ஆம் ஆண்டு குறித்த வழக்கு விசாரணைக்காக மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனமும் மீட்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் ரவி என அழைக்கப்படும் தர்மலிங்கம் இளமாறன், வீரக்குட்டி சேகர், விஜய் என அழைக்கப்படும் மகேந்திரராஜா வினோராஜ், ஜெக்கா என அழைக்கப்படும் யோகராசா ஜெயக்குமார், சிறி என அழைக்கப்படும் சிறிஸ்கந்தராஜா நாகநாதன், சிவா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகராசா, அருள் என அழைக்கப்படும் அருணாச்சலம் ராமச்சந்திரன் மற்றும் விஜி என அழைக்கப்படும் கோவிந்தன் பிரதீபன் ஆகிய எட்டு பேரே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதற்கமைய, சட்டவிரோதக் கூட்டத்தில் அங்கம் வகித்தமை தொடர்பான முதலாவது குற்றச்சாட்டின் கீழ் ஆறு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும், ஆட்கொலை தொடர்பான ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. 

தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது அரச தரப்பு சட்டத்தரணிகளான எஸ்.அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

தீர்ப்பைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு பேரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேவேளை நீதிமன்றத்திற்கு முன்னாக குழுமியிருந்த தண்டனை வித்திக்கப்பட்டவர்களிக் உறவினர்கள் கதறியழுததையும் அதவானிக்க முடிந்தது.











SHARE

Author: verified_user

0 Comments: