7 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி" – மட்டக்களப்பில் கண்ணீர் மல்க இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு 7-வது ஆண்டு நினைவேந்தல்.கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்கதலில் உயிரிழந்தவர்களின் 7-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன.
இன்று காலை 9.05 மணியளவில் சீயோன் தேவாலய முன்றலில் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கண்ணீர் மல்க மலர் அஞ்சலி செலுத்தி, சுடரேற்றி உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள நினைவுத் தூபியில், மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, கல்லடிப் பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சர்வ மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தினர்.
சீயோன் தேவாலயத் தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் தமது இன்னுயிர்களை இழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், ஒரு சிறுமி தனது கண்பார்வையை முழுமையாக இழந்ததுடன், இருவர் இன்றும் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுக்கையில் இருந்து வருகின்றனர். ஒரு தந்தை தனது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் பறிகொடுத்துவிட்டு இன்றும் நீதிக்காக ஏங்கி நிற்பது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
நினைவேந்தல் நிகழ்வுகளின் நிறைவில், "எமக்கான நீதி எங்கே?" என்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழு ஆண்டுகள் கடந்தும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் கண்டறியப்படாமை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான முறையான நீதி இன்னும் எட்டப்படாமை குறித்தும் இதன்போது கடும் அதிருப்தி வெளியிடப்பட்டது.
சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த அமைதிப் போராட்டம், உரிய தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிறைவடைந்தது.
0 Comments:
Post a Comment