முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரை
காலமானார்.
1927 யூலை27 இல் மட்டக்களப்பு நகர் புளியந்தீவில் பிறந்த செல்லையா இராசதுரை அவர்கள் 2025, டிசம்பர் 07 இல் சென்னையில் 98 அகவையில் இறைபதம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரிநேத்திரன் இவ்வாறு தெரிவிக்கின்றார்.
காலம் சென்ற இராசதுரை அவர்கள் தந்தை செல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்டிருந்தார். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன் முதலாக தந்தை செல்வாவால் மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.
பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார். இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.
ஏறக்குறைய 33, வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வடகிழக்கில் தொடர்சியாக மக்களால் தெரிவானவர் இவர் மட்டுமே.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது மாநகர முதல்வரும் இவரே.
1973, செப்டம்பர் 07இல் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் இடம்பெற்ற இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மகாநாட்டில் தலைவராக செல்லையா இராசதுரை அவர்களும், அ.அமிர்தலில்கம் அவர்களும் விரும்பி இருவரும் தலைவர் பதவியை பெறுவதற்காக போட்டி நிலை உருவானவேளையில் தந்தை செல்வா அவர்கள் தலையிட்டு இருவரையும் சாந்தப்படுத்தி செல்லையா இராசதுரையை விட்டுக்கொடுக் கொடுக்குமாறுகூறி அ.அமிர்தலிங்கத்தை தலைவராக தெரிவுசெய்தார்.
1977 யூலை 21 இல் இறுதியாக நடைபெற்ற தொகுதிவாரியான தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இவரை தோற்கடிக்க கவிஞர் காசி ஆனந்தனை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி வேட்பாளராகவும், செல்லையா இராசதுரையை தமிழர் விடுதலை கூட்டணியிலும் போட்டியிட வைத்தபோதும் இவரே வெற்றிபெற்றார்.
அவர் தமிழர் விடுதலை கூட்டணி தலைமை தமக்கு துரோகம் செய்ததாக கூறியபின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து இந்துகலாசார அமைச்சர் பதவி பெற்றார்.
ராசாத்தி – குறும் புதினம் - 1982, பெற்ற
தாயும் பிறந்த பொன்னாடும- சொற்பொழிவுகளின் தொகுப்பு, அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு
வழி – 1984 , மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு,
இலங்கையில் மகா அஸ்வமேதயாகம், அகிய நூல்கள்களையும் அவர் எழுதியுள்ளார்.
அன்னாரின் அரசியல் வாழ்வு மட்டக்களப்பில்
1977 இற்கு முன்னர் தமிழ்தேசிய அரசியலுக்கு அத்திவாரம் இட்டது என்பதை எவரும் மறுக்கமுடியாது.
என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


0 Comments:
Post a Comment