இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சி.
“அமைதியைக் கட்டியெழுப்புதலும் சமூக ஒருங்கிணைவும்” எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆறு மாத காலத்தில் இடம்பெற்ற பயிற்சிநெறியின் இறுதி அமர்வும் மீளாய்வும் கிளிநொச்சியிலுள்ள தனியார் விடுதியில் புதன்கிழமை (13.11.2025) இடம்பெற்றது.
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில் தேசிய மட்டத்தில் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய வலைமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளின் முனைப்பாக இந்தப் பயிற்சிகள் தொடராக இடம்பெற்று வந்தன.
இப்பயிற்சி நெறிகளில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் நாலா புறங்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த 25 சமூக சமாதான செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பரந்துபட்ட அளவில் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்காக பயிற்சியாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதாக பயிற்சி நிபுணத்துவ ஆலோசகர் றோச் ஸ்ரான்லி பிரபாகரன் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் தெரிவித்த பயிற்சி நிபுணத்துவ ஆலோசகர் பிரபாகரன் “முரண்பாட்டின் விளைவாக ஏற்பட்ட தாக்கங்களோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அது எங்களுடைய சொந்த அனுபவங்களாகவே மாற்றம் பெற்றிருக்கின்றன.
முரண்பாட்டினால் மக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது என்பதையிட்டு எங்களுக்குள் இருக்கின்ற உள் எச்சரிக்கையினால் சமாதானத்தின் தேவையை உணர்ந்தும் இருக்கின்றோம்.
அதேநேரம், நாம் பலவகையான ஆற்றலுள்ளவர்களாகவும் இருக்கின்றோம். ஆகவே நம்மிடமுள்ள அந்த பல வகையான ஆற்றல்களைப் பயன்படுத்தி அனுபவத்தின் வாயிலாக சமாதானத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வந்திருக்கின்றோம். எனவே, இவற்றை ஒருங்கிணைத்து நாம் சமாதானத்துக்கான பாதையில் பயணிக்க வேண்டும்.” என்றார்.
இப்பயிற்சி நெறிகளில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் திட்ட வளவாளர் எஸ்.திலீபன், திட்ட சிரேஷ்ட இணைப்பாளர். ஐ. சுதாவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தந்தை செல்வா அறக்கட்டளை மூலம் அறிவுசார் கல்வி, சமாதானம், பாதிக்கப்பட்ட மக்களின் கலை கலாசார பண்பாட்டு மீட்சி, சமாதான எண்ணக்கருக்களை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, சமாதான எண்ணக்கரு குறித்த செயற்பாடுகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு சமாதானத்தை நோக்கிய அகன்ற பார்வையைக் கொண்டு சேர்ப்பித்தல் இடம்பெற வேண்டும் என்ற பரந்த நோக்கத்தின் அடிப்படையில் சமாதான வலையமைப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன.
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை தந்தை செல்வா அவர்களின் நினைவாகவும் யுத்தத்திலிருந்து மீண்டெழும் தமிழ் பேசும் மக்களின் வல்லமையின் எடுத்துக் காட்டாகவும் இந்த மகோன்னத பணியைக் கருத்திற்கொண்டு இயங்கி வருகின்றது. அதேவேளை கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமாதானக் கலையரங்கம் சமாதானம் தொடர்பாக சிந்திக்கின்ற முறைமைகளை உருவாக்குவதற்கான கலந்துரையாடலுக்கான ஒரு களமாக “பீஸ் கலரி” என்ற பெயரில் சமாதானக் கலையரங்கம் இயங்கி வருகின்றது.
0 Comments:
Post a Comment