காலங்கள் கடந்து செல்லும் கணப் பொழுதில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றது. பாமர மக்கள் முதல் படித்தவர் வரை ஒவ்வொருவருடைய வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை சந்தித்தவர்களாகவே உள்ளனர். அந்த வகையில் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலும் மக்களின் நாளாந்த வாழ்வியலிலும் பல மாற்றங்களை காணமுடிகிறது.
இந்த வருட நடுப்பகுதியில் இலங்கை அரசியலில் மிக முக்கியமான அடிமட்ட தேர்தலான கிராமங்கள், நகரங்களை கட்டியெழுப்பும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றிருந்தது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமது கிராமத்தினை வட்டராத்தினை சேர்ந்த பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியுமென்ற பெரும் நம்பிக்கையில் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையினை மக்கள் பிரயோகித்திருந்தனர். அதன் பிரதிபயனாக இன்று நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களையும் தமது மக்கள் பிரதிநிதிகள் ஆளக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அரசாங்கம் தேர்தலை நடாத்தியிருந்தாலும் மக்கள் பெரும் நம்பிக்கையோடு தமது வாக்குரிமையினை பயன்படுத்தியிருந்தாலும் மக்களுக்கான தேவைகள் எந்தவகையில் பூர்த்தி செய்யப்படுகின்றது, குறித்த உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்காக சேவையாற்றுவதில் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கிறது என்பது பற்றி ஆராய்வது மிக அவசியமானதாக அமைந்துள்ளது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச சபையினுடைய மக்கள் நலன் சார்ந்த பணிகள் மற்றும் குறித்த சபை எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இக் கட்டுரை மூலமாக ஆராய்வோம்.
போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச சபையினுடைய நிலப்பகுதியானது நாற்பத்தி மூன்று கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக 70,000 இற்கு மேற்பட்ட சனத்தொகை கொண்டதாகவும் பத்து தேர்தல் வட்டாரங்களை உள்ளடக்கியதாக 16 உறுப்பினர்கள் கொண்டமைந்ததாக காணப்படுகிறது. நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தினை இலங்கை தமிழரசு கட்சி தனித்து கைப்பற்றியதுடன் குறித்த சபையின் தவிசாளராக விமலநாதன் மதிமேனன் செயற்பட்டு வருகிறார்.
போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச சபையினுடைய தற்போதைய செயற்பாடுகள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் தவிசாளர் தெரிவிக்கும் போது, மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கு அமைவாக மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாக மக்களுக்காக பணி செய்வதற்காகவே இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குரிய பகுதியில் வசிக்கும் எமது மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றன அடிப்படையானவையாக காணப்படுகின்றன. அந்த வகையில் இவ்வாறான மக்கள் வாழும் எமது பகுதியினை சிறப்பாக கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பினை மக்கள் எமக்கு தந்திருக்கிறார்கள். அதற்கு அமைவாக நாங்கள் செயற்பட வேண்டியது அவசியமாக உள்ளது. எமது சபையானது பல்வேறு வழிகளில் வருமானத்தினை பெற்றுக் கொள்கிறது. அதனடிப்படையில் முத்திரை தீர்வை, நீதிமன்ற தண்டப்பணம், வருடாந்த வியாபார அனுமதி பத்திரம் வழங்கல், கட்டிட அனுமதி போன்றன உள்ளடங்கலாக கிட்டத்தட்ட 25 மில்லியன் ரூபாய் வருமானம் இந்த ஆண்டில் இது வரை காலப்பகுதியில் எமது சபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
நாங்கள் சபை நடவடிக்கைகளை பொறுப்பேற்றதன் பின்னர் 20 மில்லியன் பெறுமதியான கிழக்கு மாகாண அபிவிருத்தி உதவி திட்டத்தின் மூலமாக தற்பொழுது 19 வேலைத் திட்டங்களை ஆரம்பித்திருக்கிறோம். குறிப்பாக கிராமிய குடிநீர் வழங்கல் திட்டம், திண்ம கழிவகற்றல், நலன்புரி வேலைத்திட்டம் (நூலகம், பாலர் பாடசாலை அபிவிருத்தி) , வீதி புனரமைப்பு, அலுவலக புனரமைப்பு போன்ற பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்து அவை தற்பொழுது நடைபெற்று வருகின்றது. அதேய போன்று பிரதேச சபையினால் வாகன திருத்தங்கள், சபையினுடைய ஆளுகைக்குட்பட்ட கலாசார மண்டபங்களை திருத்தி அமைத்தல் போன்ற சிறு பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு வருமான வழிகள் மூலமாக எம்மால் இயன்ற பணிகளை மக்களுக்காக செயற்படுத்த ஆரம்பித்திருந்தாலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. குறிப்பாக சபையினுடைய ஊழியர்களுக்கு மாத்திரம் ஒரு வருடத்துக்கு 12 மில்லியன் சபையினால் வழங்கப்படுகிறது இது பெரும் நிதியாகையினால் நாம் பெரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.
அத்துடன் வருமானப் பற்றாக்குறை காணப்படுவதற்கான பல காரணங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, வர்த்தக நிலையங்கள் எமது பகுதியில் குறைந்தளவு காணப்படல், வருமான வரிக்கான (சோலை வரி) அனுமதி இதுவரை கிடைக்காமை, சுற்றுலா துறைசார்ந்த இடங்கள் எமது பகுதிகளில் காணப்படாமை சந்தை கட்டிட தொகுதிகள் காணப்பட்டாலும் மக்கள் பயன்படுத்தாமை போன்றன வருமானம் ஈட்டுவதற்கு தடைகளான காரணிகளாக காணப்படுகின்றது. அதிலும், வருமானத்தினை ஈட்டக் கூடிய வகையில் மக்கள் நுகர்வுக்கு சிறந்த சந்தை தொகுதி எமது பகுதிகளில் காணப்படாமையினாலும் களுவாஞ்சிகுடி, கல்முனை நகர் பகுதிகளை நோக்கி மக்கள் செல்ல பழகிவிட்டதனால் அது பெரும் சவாலான விடயமாக காணப்படுகின்றது. இதனால் இவற்றை மாற்றியமைத்து சிறந்த வருமானம் ஈட்டக் கூடிய வழி வகைகளை ஏற்படுத்தக் கூடிய நீண்டகாலத் திட்டங்களை உருவாக்கி வருகின்றோம்.
அவ்வாறே திண்மக்கழிவு முகாமைத்துவத்தினை மேற்கொள்வதில் எமக்கு நிலப்பரப்பு தடையாக உள்ளது. குறிப்பாக திக்கோடை தளவாய் காட்டுப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு 2007 ஆம் ஆண்டு பத்து ஏக்கர் இட ஒதுக்கீடு மேற் கொள்ளப்பட்டிருந்தாலும் இது வரை இரண்டு ஏக்கர் நிலப்பகுதி மாத்திரம் தான் கையளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் திண்ம கழிவகற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறோம். விரைவில் அதனை தீர்த்து சிறந்த வேறு பிரிக்க கூடிய முறையிலான திண்ம கழிவகற்றல் செயற்முறையினை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறோம்.
அவ்வாறே எமது போரதீவுப்பற்று பிரதேசம் வேளாண்மை செய்கை பெருமளவு பண்ணப்படும் பகுதியாக காணப்படுகின்றது. இதனால் அறுவடை காலம் முடிந்த பின்னர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி காட்டுயானை நுழைவதனால் உயிரிழப்புக்கள், வீடுகள், பயிர் நிலங்கள் அழிக்கப்படுவதனால் மக்கள் பெருவாறாக பாதிக்கப்படுகிறார்கள். இது பெரும் சவாலான பணியாக காணப்பட்டாலும் வனஜீவராசிகள் திணைக்களம், பிரதேச செயலகத்துடன் இணைந்து நிரந்தரமாக இந்த யானை பிரச்சனைக்கான தீர்வினை காண்பதற்கான முன்திட்ட வரைபினை தயாரித்து வருகிறோம். விரைவில் இந்த யானை பிரச்சனைக்கான தீர்வினை படிப்படியாக குறைத்து முழுமையான தீர்வினை பெற்று கொடுப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
எமது சபைக்குரிய பகுதிகளின் பெரும்பாலான கிராமங்களில் சுத்தமான குடிநீரினை பெறுவதில் இடர்களை எதிர்கொண்டு வருகிறோம். அம்பாறை பகுதியிலிருந்தே குடிநீர் விநியோகம் இடம்பெறுவதனால் சீரான முறையில் எமது பகுதிகளில் நீர் கிடைக்கப்பெற முடியாமல் உள்ளது. இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அவிருத்தி குழு கூட்டத்தில் விடயங்களை முன்வைத்துள்ளோம். அதனையும் விரைவில் சீர் செய்ய நடவடிக்கை எடுப்போம். அதேயவேளை குழாய் நீர் இணைப்
புகள் அற்ற பகுதிகளில் வவுசர்கள் மூலமாக வாராந்தம் இரண்டு தடவைகள் அளவில் நீர் விநியோகத்தினை மேற்கொண்டு வருகிறோம். வெள்ள அனர்த்தங்கள் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படுவதனால் உரிய திணைக்களங்களோடு கலந்துரையாடி துர்ந்து போயுள்ள குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்.
புகள் அற்ற பகுதிகளில் வவுசர்கள் மூலமாக வாராந்தம் இரண்டு தடவைகள் அளவில் நீர் விநியோகத்தினை மேற்கொண்டு வருகிறோம். வெள்ள அனர்த்தங்கள் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படுவதனால் உரிய திணைக்களங்களோடு கலந்துரையாடி துர்ந்து போயுள்ள குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்.
குறிப்பாக எமது பிரதேசத்தினை சேர்ந்த மக்கள் அன்றாட ஜீவநோபாய தொழிலினை நம்பி வாழும் மக்கள் உள்ளமையினால் எமது சபையானது இப் பகுதி மக்களுக்கு விசேடமாக சிறந்த சேவையினை மேற்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். அதனால் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் விசேட நிதிகளை எமது சபைக்கு ஒதுக்கி மக்களுக்கான சிறந்த சேவைகளை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment