கட்டுரை : படுகொலை செய்யப்பட்ட காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதிக் கோரிக்கை.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி திருகோணாமலை ஓர்சில் பார்க்கில் அன்றயதினம் காலை 9 மணி அளவில் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சிகிரதராஜன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
1969 டிசம்பர் 12ஆம் திகதி மட்டக்களப்பு - குறுமன்வெளியில் பிறந்த சுகிர்தராஜன் தொழில் நிமித்தமாக திருகோணாமலையில் தங்கி இருந்து பணியாற்றிவந்திருந்தார். இந்நிலையில் அவர் ஊடகவியலாளர்கள் மீதும் மக்களுக்கும் ஏனைய பல்வேறு துறை சார்ந்தவர்களுக்குமான மதிப்பையும் அங்கீகாரத்தையும் கொண்டு வருவதற்காக பாடுபட்டிருந்தார்.
2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை சுகிர்தராஜன் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.
மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே
காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தபோது, உயிரிழந்த மாணவர்களை சுகிர்தராஜன்
எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக்காட்டின. இதனால்
சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அழுத்தங்கள் ஏற்பட்டன.
சுகிர்தராஜன் யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போதே 2006 ஜனவரி 24 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அன்னாரின் 19 ஆவது ஞாபகார்த்த தினத்தை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம், யாழ் ஊடக அமையம், வவுனியா ஊடக அமையம், கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒன்றியம்;, முல்லைத்தீவு ஊடக அமையம், மன்னார் ஊடக அமையம், அகம் மனிதாபிமான வள நிலையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், இணைய ஊடகச் செயற்பாடு, மற்றும், தெற்கு ஊடக அமைப்புக்கள், பிரதேச சிவில் வலையமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண் மனித உரிமை பாதுகாவலர்கள் வலையமைப்பு, பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியன ஒன்றிணைந்து கடந்த 24 ஜனவரி 2025 ஆகிய அன்று திருகோணமலையில் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் அஞ்சலி நிகழ்வை நடாத்தியிருந்தனர். பின்னர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி போட்டாரத்திதிலும் ஈடுகட்ட சக ஊடகவியலாளர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதனை ஜனாதிபதிக்கு வழங்குமாறு தெரிவித்து கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் அருள்ரஜாவிடம் சமர்ப்பித்திருந்தனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
இலங்கையின் ஊடகத்துறை வரலாறு பல்வேறு கொலைகளையும், கொடுமைகளையும், அச்சுறுத்தல்களையும், நெருக்கடிகளையும் உள்ளடக்கியதாகவே கடந்து போயிருக்கிறது. அவ்வாறானவைகள் இனிவரும் காலங்களிலேனும் இல்லாதிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
ஊடகப் பணியை, நேர்மையாக முன்னெடுப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலேயே கடந்த யுத்த காலங்களில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் பலர் தமது உயிரைக்காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்குமப்பால் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதுடன்,காணாமலாக்கப்பட்டும், பலர் உயிரைப் பாதுகாப்பதற்காக ஊடகப் பணியை விட்டொதுங்கியதுடன் பலர் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து தப்பியோடி தஞ்சமடைந்திருக்கின்றனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்தும் குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட எமது ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கப் பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் 41இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்ட
44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு மாகாணங்களைச்
சேர்ந்தவர்கள்.
ஐயாத்துரை நடேசன், தராக்கி த.சிவராம், எல்.எம்.பலீல் (நற்பிட்டிமுனை பலீல்), சுப்பிரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜா, சுப்பிரமணியம் ராமச்சந்திரன், சந்திரபோஸ் சுதாகர், செல்வராசா ரஜீவர்மன், இசைவிழி செம்பியன் (சுபாஜினி), பரணி ரூபசிங்கம் தேவகுமார், இராசையா ஜெயேந்திரன், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, மகாலிங்கம் மகேஸ்வரன், மாரியப்பு அந்தோணிகுமார், ஷோபனா தர்மராஜா (இசைப்பிரியா), மற்றும் சகாதேவன் நிலக்சன் உள்ளிட்டவர்கள் 2004-2010 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்டதுடன், அதே காலப்பகுதியில் திருகுலசிங்கம் தவபாலன், பிரகீத ஆகிய ஊடகவியலாளர்கள் காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை வடக்கு - கிழக்கு - தெற்கு ஊடக அமைப்புக்கள் தொடர்ச்சியாக கண்டித்தே வந்துள்ளன.
2000ஆம் ஆண்டில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதோடு அரங்கேறிய ஊடகப் படுகொலைகள் நீண்டுகொண்டே சென்றிருந்தது.
வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவோ சட்டத்தின்முன் நிறுத்தப்படவோ இல்லை.
நாம் வடக்கு, கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களுக்கான சமரசம் செய்துகொள்ளத் தேவையற்றதான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிவருகின்றோம்.
இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதிக் கோரிக்கைக்கான சரியான விசாரணைகள்கூட முன்னெடுக்கப்படவில்லை. 2005–2009 வரையான நல்லாட்சி காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களது குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக இழப்பீடொன்றை வழங்குவதற்காக விசாரணை குழுவொன்றும் அமைக்கப்பட்டது. இருப்பினும் அது எந்தப்பயனையும் பெற்றுத்தரவில்லை.
பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவ்வாறு விசாரணைக்குழுவே நியமிக்கப்பட்டிருக்கவில்லை எனவாதிடப்பட்டிருந்தது. அவர் ஆட்சியை விட்டுத் துரத்தப்படும் வரை
ஊடகவியலாளர்களின்
விடயங்கள் எதுவும் கவனத்திலெடுக்கப்படவில்லை.
பின்னர் நடைபெற்ற ஆட்சியிலும் பூசிமெழுகல்களே நடைபெற்றிருந்தன. தாங்கள் ஜனாதிபதியானதையடுத்து ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரணைக்குட்படுத்தப் போவதாக அறிவித்திருந்தீர்கள். அதில் த.சிவராம், லசந்த விக்கிரமதுங்க போன்ற ஊடகவியலாளர்களுடைய வழக்குகளும் உள்வாங்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர் நவம்பர் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த 2024டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்தார். தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரமல்ல. சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன்னிற்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் விசாரணைகளின் நிலைமை தொடர்பில் இன்னமும் எவ்வித தகவல்களும் வெளியில் வரவில்லை. நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம், ஊழல்களைக் கண்டுபிடிக்கும் செயற்பாடு எனப் பல வேலைகளுக்கு மத்தியில் படுகொலையான ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட
அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என சர்வதேச, தேசிய, வடக்கு,
கிழக்கு ஊடக அமைப்புக்களால் தொடர்ச்சியாகவும், மீண்டும் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்துவதை
மாத்திரமே செய்யமுடிகிறது. அந்தவகையில் ஊடகவியலாளர்களின் மரணம் மற்றும் காணாமலாக்கப்பட்டமை
தொடர்பான விசாரணைகள் தவிர்க்கப்பட்டு வருவதாகவே எம்மால் ஊகிக்க முடிகிறது,
வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் முறையான பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு அறிவித்தலை வெளியிடுவதும் பின்னர் அது கைவிடப்படுவதும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் நடைபெறாது என நம்புகிறோம்.
படுகொலை செய்யப்பட்ட காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைப்பதும் நிவாரணங்கள் வழங்கப்படுவதும் பறிக்கப்பட்ட உயிர்களையும் அவர்களின் குடும்பங்களின் கடந்தகால சிறப்பான வாழ்வையும் தந்துவிடப்போவதில்லை என்றாலும் ஒரு நிம்மதியையேயும் ஏற்படுத்தும் என்றும் நம்புகின்றோம்.
மக்களுக்கு உண்மையான தகவலை வழங்கும் தன்னுடைய பணியைச் செய்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 19வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார். அவருடைய நினைவு நாளில் இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் ஊடக அமைப்புக்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள்.
1.படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நீதிக்காக தனியான விசாரணைக்குழுவினை நியமித்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியை வழங்க வேண்டும்.
2.இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் 41இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆகவே இதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்படல் வேண்டும்.
3.கடத்தப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை இலங்கை அரசானது வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன், பொறுப்புக் கூறலில் இருந்து அரசு விடுபடக் கூடாது எனவும் வேண்டுகின்றோம்.
4.இலங்கையின் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
5. அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
6.குற்றவாளிகளை தண்டணையிலிருந்து விலக்களிக்காமலிருக்கும் கலாசாரத்தை கொண்டுவருவதுதான் சுதந்திரமான ஊடக செயற்பாட்டை உறுதி செய்யும். ஆகவே தண்டணையிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கைகளை ஊடக அமைப்புக்கள் அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளன.
நாங்கள் இலங்கையில் இருக்கின்ற அனைத்து
ஊடகவியலாளர்களும் ஒருமித்து செயல்படுகின்ற போது பல விடயங்களை சாதிக்க முடியும் என்ற
நம்பிக்கையும் எமக்கு ஏற்படுகின்றது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவேந்தல்
நிகழ்வுகள் வருடந்தோறும் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். அதேபோல் படுகொலை செய்யப்பட்ட
ஊடகவியலாளர்களுக்கான நீதியை இலங்கை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும். அதற்காக ஊடகவியலாளர்கள்
அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். அந்த நீதி கிடைக்கும் வரை ஊடகவியலாளர்களாகிய நாங்கள்
தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே வர வேண்டும். என திருகோணாமலை மாவட்ட ஊடகவியலாளர் வ.ராஜ்குமார் தெரிவிக்கின்றார்.
உண்மையிலே இந்த நாட்டிலே நாங்கள் ஒரு ஊடகவியலாளர் என்று சொல்வதில் வெட்கப்படுகின்றோம் இந்த நாட்டை விட்டு ஓடிய பல ஊடகவியலாளர்கள் புலம்பெய்திருக்கிறார்கள். அவர்கள் பேனா தூக்கிய ஊடகவியலாளர்களை ஆயுதமுனையிலே கொல்வது என்பது ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வதில் வெட்கமாக இருக்கிறது. அக்கால பகுதியில் செயற்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் சுட்டு இருக்கலாம். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்பு மிக்க பிரதேசங்களில் வைத்து சுடப்பட்டிருக்கிறார்கள்.
ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் இந்த நாட்டிலே என்றைக்குமே பாதுகாப்பு இல்லை. 2009போர் முடிந்த பின்னரும் உண்மையிலேயே ஊடகப் பணியாற்றுகின்ற எம் அனைவருக்கும் தெரியும் உண்மையான செய்திகளை வெளிப்படையாக கொண்டுவர முடியாமல் இருப்பதையிட்டு வேதனையாக இருக்கிறது. ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வதில் வெட்கமாக இருக்கின்றது. மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் முகங்கள் தான் மாறிக் கொண்டிருக்கின்றதே தவிர ஒரே நாட்டு அரசுகள் சிங்கள தரப்பு அரசுகள் தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் ஒரு ஊடகவியலாளரின் படுகொலை தொடர்பில்கூட நீதிமன்றத்திலே விளக்கம் கூறவில்லை. ஊடகவியலாளர்கள் பற்றிய எதுவித கேள்வியும் எழுப்பவில்லை. 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனைவரையும் தேடி தேடி சுடப்படுகின்ற காலமாகும். யாரையும் சுடலாம் 39 ஊடகவியலாளர்களை நாங்கள் வடக்கிலே இழந்திருக்கின்றோம். தேடித்தேடி பிடித்து சுட்டு கொலை செய்யும் அளவிற்கு இந்த நாட்டுக்கு கெடுதியானவர்கள் என ஊடகவியலாளர்களை சுட்டுக் கொண்டார்கள். அவ்வாறுதான் இந்த அரசுகள் நினைத்திருக்கின்றன. அதனால்தான் ஊடகவியலாளர்களுக்கு மரண தண்டனை கொடுத்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். படுகொலை செய்யப்பட்ட 39 தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் இன்றுவரை ஒருவருக்குகூட நீதிகளைக்கவில்லை. கடந்து வந்த அரசுகளைவிட இனி வருகின்ற அரசுகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது படு வேதனையான விடயமாக உள்ளது.
இருதராஜன் படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் நாங்கள் அவருக்கான 19வது ஆண்டு நினைவஞ்சலியை செலுத்துவதில் வெட்கமடைகின்றோம். நாங்கள் அஞ்சலி செலுத்துகின்றோம். இந்த இடத்திலிருந்து இந்த ஆத்மா கேட்கும் இவ்வளவு பேரும் ஒன்றிணைந்து நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள்? எனக்கு நீதியை பெற்று தந்தீர்களா? நான் என்ன செய்தேன்? நான் இந்த இடத்தில் இருக்கின்ற செய்தியைதானே வெளிக்கொணர்ந்தேன் எனக்கு நீதியை பெற்று தந்தீர்களா? எவ்வளவு பேர் ஊடகவியலாளராக இருக்கின்றீர்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்பதை சுகிர்தராஜனின் ஆத்மா இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த ஆத்மாவுக்கு நாங்கள் பதில் சொல்வோமானால் எந்த அரசு வந்தாலும் அந்த அரசை நாங்கள் துணிந்து கேட்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் தத்துணிவாக எமது ஊடகப் பணியை செய்யலாம்.
நாங்கள் துப்பாக்கி தூக்கவில்லை நாங்கள்
பேனை தூக்கி இருக்கின்றோம். ஜனநாயக நாடு என்கின்றதனால்தான் நாங்கள் பேனை தூக்கி இருக்கின்றோம்.
முழு பாதுகாப்பு எனக்கு வழங்க வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் எப்போது முழு
பாதுகாப்பு வழங்குகின்றதோ, அப்போதுதான் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது
நமது நாடு முன்னேற்றம் அடையும் என யாழ் ஊடக
அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் தெரிவிக்கின்றார்.
நாங்கள் இன்று வரைக்கும் இந்த நாட்டிலே 40க்கும் மேற்பட்ட ஊடக உறவுகளை இழந்தும் அவர்களுக்கான நீதியைகோரி நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளிலும், நாடாக ஏறி இறங்கி கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டு வருகின்றோம். ஆனால் இன்று வரைக்கும் எமது இலங்கை அரசாங்கம் இதுசாந்து எந்த பொறுப்புக் கூறல்களையோ நீதியையோ வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் இலங்கை அரசாங்கம் இருப்பதையிட்டு நாங்கள் கவலை அடைகின்றோம்.
நாங்கள் சிவில் அமைப்பு என்ற அடிப்படையில் உண்மையிலேயே ஊடகவியலாளராக இருக்கலாம் அல்லது ஏனைய உறவுகளாக இருக்கலாம் யுத்த காலத்திலோ அல்லது அதற்குப் பின்னரான காலத்திலோ பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களில் நாங்கள் அனைவரும் செயற்பட்டு வருகின்றோம்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின்
நீதிவேண்டி நாங்கள் பலவிதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் இன்று வரைக்கும்
அதற்குரிய நீதி என்பது எங்கள் பக்கம் நெருங்கவே இல்லை. அதற்கு இயலாத சூழ்நிலையிலேதான்
இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றது. சட்ட ஆட்சி என்பதோ, நீதி என்பதோ பக்கச் சார்பாக
இருப்பது என்பதையிட்டு நாங்கள் கவலை அடைகின்றோம். எப்பொழுது எமது நாட்டில் ஜனநாயகம்
சட்ட ஆட்சி நீதித்துறை சமமாக பக்க சார்பின்றி நடைபெறுகிறதோ, அன்றுதான் நாங்கள் முழுமையான
இலங்கையார்கள் என்று கூறக் கூடியதாக இருக்கும்.
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலி கொட வின் மனைவி கூட இன்று வரைக்கும் அவருடைய கணவருக்காக நீதிவண்டி போராடிக் கொண்டே வருகின்றார். படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் அல்லது கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அவர்களுக்கான நீதி என்பது எட்டாக்கனியாக இருந்து வருகின்றது. குறிப்பாக 44 மேற்பட்ட இலங்கையிலே படுகொலை செய்யப்பட்டிருந்தாலும்கூட வடகிழக்கிலேயே 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக வடகிழக்கிலே இருக்கின்ற மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணரக் கூடாது அவர்களது பிரச்சனைகள் இந்த தேசத்திலும் சர்வதேசத்திலும் பேசப்படக்கூடாது என்பதன் அடிப்படையில் தான் இந்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் இவ்வாறான படுகொலைகளை மேற்கொண்டு இருப்பதை நாங்கள் அறியக்கூடிய இருக்கின்றது.
தற்போது ஆட்சிக்கு வந்திருக்கின்ற அரசாங்கம்கூட
சட்ட நடவடிக்கைகள் ஒழுங்காற்று நடவடிக்கைகள், கிளீன் ஸ்ரீலங்கா, ஊழல் விடயங்களைக் கடண்டறியும்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியை நிச்சயம் பெற்றுக் கொடுக்கவும்
வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம். அவ்வாறு ஊடகவியலாளர்களை தாக்கிய படுகொலை
செய்த காணாமலாக்கிய கடத்திய, அந்த நபர்கள் இன்று வரை இலங்கையிலே சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
அவர்களை நீதி பொறிமுறை, சட்ட ஆட்சியின், கீழ் நிறுத்தி அவர்களுக்கு தண்டனையை இலங்கை
அரசங்கம் வழங்க வேண்டும்.
மீண்டும் இந்த நாட்டிலே சுகர்தராஜனை போல் ஒருவர் படுகொலை செய்யப்படாமல் இருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இலலையேல் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. என அகம் மனிதாபிமான வள நிலையத்தின் பணிப்பாளர் கே.லவகுசராசா தெரிவிக்கின்றார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஊடகவியலாளர்களுக்கான
அடக்குமுறைகளும், ஒடுக்கு முறைகளும், அச்சுறுத்தல்களும், இன்றைக்கும் தொடர்ந்து கொண்டேதான்
இருக்கின்றன. வடிவங்கள் மாறி இருக்கின்றதேதவிர ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள்
இன்றைக்கும் தொடர் கொண்டேயிருக்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டிலே சுதந்திரமாக இயங்க வேண்டிய
ஊடகத்துறை இன்றைக்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி கொண்டிருக்கின்றன. யதார்த்தமாக பேசவேண்டிய,
உண்மைகளை சொல்ல வேண்டிய, உண்மைகளை எடுத்துக்கூறுகின்ற,எழுமுகின்ற, ஊடகவியலாளர்களுக்கு
இன்றைக்கும் நெருக்கடிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நெருக்கடி நிலைமைகள் ஊடகவியலாளர்களின்
குரல்களை அடக்குவதற்காகவும், அவர்களின் எழுத்துக்களை நசுக்குவதற்காகவும் இன்றைக்கும்
பல்வேறு வடிவங்களிலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கொண்டிருக்கின்றது 2009 முற்பட்ட காலத்தில் யுத்தம் மிகவும் மோசமாக நடைபெற்ற காலத்திலே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஏராளமான மனித உரிமை மீறலும் அநீதிகள் நடைபெற்றன. இன்று வரைக்கும் அதற்கு நீதி கிடைக்கவில்லை. கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்கள், எவருக்கு இன்று வரை நீ கிடைக்கவில்லை தற்போது இருக்கின்ற அரசு ஆட்சிக்குவர முதல் எம்முடன் இணைந்து பயங்கரவாத தடைசட்டத்திற்கு எதிராகவும், ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும், போராடியது. தற்போது அதிகாரத்துக்கு வந்தவுடன் எதையும் கண்டு கொள்வதாக இல்லை.
ஊடகவியலாளர்கள் இன்றைக்கும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துதான் செயற்படுகின்றார்கள். சட்டவிரோத செயற்பாடுகளையும் போதைப்பொருள் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் ஊடகவியலாளர்கள் இன்றைக்கும் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இந்த நிலைமையில் இருந்து மாறவேண்டும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் அநீதி இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட ஊடக மையத்தின் செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் தெரிவிக்கின்றார்.
எனவே இனிமேலாவது நாட்டின் நாலாபாகமும்
களத்தில் நின்று செயற்படுகின்ற ஊடகவியலார்களின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படாதவாது
அவர்களின் நலநோம்பு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலார்களுக்காக
அவர்களின் குடும்பதினருக்கும், ஊடகத்துறைக்கும், நீதியைப் பெற்றுக்கொடுக்க துறைசார்ந்தவர்கள்
முன்னிற்க வேண்டும் என்பதையே அவைரும் எதிர்பார்கின்றனர்.
0 Comments:
Post a Comment