13 May 2025

உப்பு விலை உயர்வினால் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த முடியவில்லை.

SHARE

உப்பு விலை உயர்வினால் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த முடியவில்லை.

உப்பு விலை உயர்வினால் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த முடியவில்லை என உப உணவு பதனீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

கடந்த நொவெம்பெர் மாதத்திற்குப் பின்னராக இருந்து இந்த நிலைமை நீடிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலேயே 60 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ கல் உப்பு சமீப சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக விலை அதிகரித்து தற்போது ஒரு கிலோ 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

உப்பு விலையின் இந்த அசுர அதிகரிப்பினால் உப்பைக் கொண்டு பதனிடப்படும் உப உணவுகளை பதனிட முடியவில்லை என்று உணவு பதனிடுவோர் அங்கலாய்க்கின்றனர். 

இதேவேளை, அதிக விலை கொடுத்து உப்பை வாங்கி  உப்பைப் பிரதானமாகக் கொண்டு பதனிடப்படும் மோர் மிளகாய், ஊறுகாய், உப்புக் கருவாடு  ஆகியவற்றை பதனிட முடியாததால் ஒரு புறத்தில் உப்புக் கருவாடு மோர் மிளகாய் ஊறுகாய் என்பனவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

மறுபுறத்தில், மிளகாய் கருவாடு தயாரிக்கப் பயன்படும் நெத்தலி, அய்யா மாசி, கூனி இறால், கட்டாப்பாரை போன்ற  மீன்கள், தேசிப்பழம் என்பனவற்றை விற்பனை செய்ய முடியவில்லை என்று விவசாயிகளும் மீனவர்களும் தெரிவிக்கின்றனர். 

இதன் காரணமாக மிளகாய் உற்பத்தி செய்யப்படும் சில பிரதேசங்களில் ஒரு கிலோகிராம் மிளகாய்  100 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியாத நிலையுள்ளதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இதேபோன்று கருவாட்டுக்காக சிறு மீன்களைப் பிடிப்போரும் உப்புக் கருவாடு தயாரிக்க முடியவில்லை என்பதால் சில நேரங்களில் பிடிக்கப்படும் மீன்களை விற்க முடியாததால் அவற்றைக் குப்பையில் கொட்டவேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 

ஒட்டு மொத்தத்தில் உப்பு விலை உயர்வினால் விவசாயிகளும், மீனவர்களும், இல்லத்தரசிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த வருடத்தில் பெரு வெள்ளத்தினால் ஏற்பட்ட உப்புப் பற்றாக்குறையை நீக்க இந்தியாவிலிருந்து 30 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அது பெப்பரவரி மாத இறுதியில் இலங்கைக்கு வந்து சேர்ந்து விடும் என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




 

SHARE

Author: verified_user

0 Comments: