எங்களுடைய கைகளிலேயே துப்பாக்கிகள் திணிக்கப்பட்டன.
பிள்ளையான்.
என கிழக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படுகின்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு வியாழக்கிழமை(27.03.2025) கிரான் ரெஜி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஒரு உறுதியான அமைப்பாக கிழக்கு மாகாண அரசியல் சமூக பொருளாதார மேம்பாட்டின் ஆரம்பமாக மிளிர வேண்டும் என்று ஒரு நல்ல சிந்தனைஓடு நாங்கள் கூடியிருக்கின்றோம். உள்ளுராட்சி மன்ற மண்ங்களின் வெற்றி என்பது உள்ளுர் தலைவர்களை உருவாக்குவதற்கான வெற்றிஆகும்.
உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே களமிறங்கி இருக்கின்றபோது உள்ளுரிலே இருக்கின்ற சொத்துக்களை பாதுகாப்பதற்கும் உட்கட்டுமான வசதிகளை கிராமங்களில் பெருக்குவதற்கும் சேமக்காலை, குடிநீர்வசதி, பொதுஇடங்கள், விளையாட்டு மைதானங்கள், சிறுவர்பூங்காக்கள், போன்ற கட்டுமான வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளுர்சேவை வழங்குவதற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் நூறுவீத சமூக செயற்பாடாக இருக்க வேண்டும். இதற்காகத்தான் நாங்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கிராமமட்டத்திலேயே இருந்து கட்டி எழுப்பப்பட வேண்டும் எமதற்கு இணங்க நாங்கள் கிழக்கிலே தலைமைகளாக இருந்து மிக நீண்ட காலமாக கிழக்கு மண்ணை கட்டி எழுப்பியவர்கள் இன்று ஒன்று சேர்ந்திருக்கின்றேர். இதனால்தான் கிழக்கின் தலைவிதியை மாற்ற முடியும் என்ற அடிப்படையில் நாங்கள் ஒன்றுசேர்ந்து இருக்கின்றோம்.
உள்ளுர் அதிகார சபைக்காக போட்டியிடுகின்றவர்கள் எண்ணங்களையும், சிந்தனைகளையும் சரியாக மாற்றிக் கொள்ள வேண்டும். உயர்த்திக்கொள்ள வேண்டும். உள்ளுராட்சி மன்றங்களிலே சட்டரீதியான பல பிரச்சினைகள் இருக்கின்றன வேண்டாத செலவுகள் வேண்டாத கூட்டங்கள், போன்ற விடயங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின்
கல்குடா தொகுதியிலேயே அமைந்திருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள்
மிகவும் கவனமாக செயற்பட வேண்டிய உள்ளது. கிழக்கு மாகாணத்திலே இந்தகல்குடா தொகுதியிலேயே
மிகவும் நெருக்கடியான பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தன. அதில் கண்டியைப் பிறப்பிடமாகக்
கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ்ஹக்கீம் அவர்கள் இந்த மண்ணிலே சுமார்
40000 ஏக்கரை அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக கேட்கின்றார். ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட
பாராளுமன்ற உறுப்பினர் 70,000 ஏக்கரை அவர்கள் நிர்வகிக்க வேண்டும் என கேட்கின்றார்,
இவ்வாறுதான் பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன. இதற்குள்ளே அதிகாரம் செலுத்துவதற்கு
தயாராக உள்ள தற்போதைய உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள் இங்கு வருமானங்களை அதிகரிப்பதற்கும்
உப சட்ட பிரிவுகளை உருவாக்குவதற்கும் மிகக் கடுமையாக இருக்க வேண்டும். நிலப்பிரிவு எல்லாம் தற்போது யாரெல்லாம் சுவிகரிக்கின்ற
நிலைமையை ஏற்பட்டிருக்கின்றது. 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது பிரதேசங்கள் எல்லாம்
இயங்காமல் இருந்தன. அதன் பின்னர் இயங்கத்துவங்கின. ஆனாலும் நாம் பல விடயங்களை இன்னும்
செய்யாமல் விட்டிருக்கின்றோம் என்ற கவலையும் குறைபாடும் இருக்கின்றது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் உள்ளுரிலே இருக்கின்ற சமூகமட்ட அமைப்புகளின் மீதும் மனங்களை வெல்ல வேண்டும் அப்போதுதான் 2008 ஆம் ஆண்டுபோல அனைத்து வட்டாரங்களையும் எங்களால் இலகுவாக கைப்பற்ற முடியும் அனைவரும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
அதிகம் பேர் என்னிடம் கேட்டதெல்லாம் ஏன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், கருணா அம்மானும் மீண்டும் சேர முடியாது என கேட்டார்கள் அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்திருந்தோம் அது இப்போது சாத்தியமாகி இருக்கின்றது. காலம் தாழ்த்திய முடிவாக இருந்தாலும் சாலப் பொருத்தமான முடிவு என பெரியவர்கள் கூறுகின்றார்கள். அதற்காக உழைத்தவர்தான் முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள்.
நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் சபைகளைக் கைப்பற்றி அரசியல்வாதிகள் எல்லோரும் ஊழல் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனாலும் ஊழல் செய்கின்றோம் என்ற குற்றச்சாட்டிலே தேர்தல் கால விசாரணைகள், தேர்தல் கால கைதுகளைப் பற்றி என்ன சொல்வது இது ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலாகத்தான் இருக்க முடியும் என்பதை என்னால் ஓர் அரசியல்வாதியாகக் கூறமுடியும்.
இந்த நிலைமையை கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அரசாங்கம் செய்திருந்தது. கருனா அம்மனையும் பிரித்தானிய அரசாங்கம் தடை செய்திருப்பதானது அது எம்முடைய தோல்வி அல்ல அது இந்த அரசாங்கத்தினுடைய இராஜதந்திர தோல்வியாகத்தான் என்னால் பார்க்க முடியும்.
அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தினுடைய தலைவிதியை மாற்ற வேண்டிய, கிழக்கு மாகாண மக்களை தூக்கி நிறுத்த வேண்டிய விடயங்கள் எல்லாம் எங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டு இருக்கின்ற விடயங்களாகவுள்ளது. இன்று வட பகுதி தலைவர்கள் கைவிட்டால் எங்களால் வாழ முடியாது என்று எண்ணிக்கொண்டு அவர்களை எஜமான்களாக நம்பிக் கொண்டிருக்கின்ற சில தலைவர்கள் கொதிநிலை அடைந்திருக்கின்றார்கள். அவர்கள் வரலாற்றை புரட்டிப் போடப் பார்க்கின்றார்கள்.
மக்கள் சிந்திக்க வேண்டும் அவர்கள் எண்ணுவதென்னவென்றால் இளைஞர்கள் மத்தியிலே நஞ்சூட்ட வேண்டுகின்றார்கள். எஜமான்களின் காலடியில் கிடக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களை தொடர்ந்தும் தடவிக் கொண்டிருக்க வேண்டும், அவர்களுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும், என்பதற்காக ஊடகங்களிலே பல கருத்துக்களை சொல்லுகின்றார்கள். ஆனாலும் கவலை என்னவெனில் அந்த எம்.பி ஒரு வரலாற்று ஆசிரியர் நானோ கருணா அம்மானோ, அல்லது ஜூலை கலவரமோ எல்லாவற்றிக்கும் அடித்தளமிட்டவர்கள் யார்?
1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டை தீர்மானத்தை எடுத்த பொழுது அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை தேடி கற்றுக் கொள்ளுங்கள். விடப்பட்ட சொல்லாடல்களும், கருத்தாடல்களும்தான் அன்று எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை தலைவரை ஆக்கியது அவர்கள் பற்ற வைத்த நெருப்பு பெரும் தீப்பொறியாக பல இயக்க தலைவர்களை உருவாக்கி திட்டங்களையும் துவக்குகளையும் ஏந்துகின்ற நிலைக்கு எங்களுடைய காலடிக்கு கொண்டு வந்து தந்தது.
பிறப்பாலும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் எங்களுடைய கைகளிலேயே துப்பாக்கிகள் திணிக்கப்பட்டன. இவற்றையெல்லாம் கூறாமல் இடைநடுவிலே அழகான படத்தைப் பார்த்துவிட்டு வில்லன்களுடைய கதைகளை மாத்திரம் எங்களுடைய தலைகளிலேயே சொருகப் பார்க்கின்றார்கள். அதிலும் படித்தவர்கள் ஆசான்கள் என்று சொல்லுகின்ற இந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் என்ன செய்தார்கள் இந்த மண்ணுக்கு.
நாங்கள் சொல்ல முடியும் இந்த மண்ணிலே ஆயிரக்கணக்கான பிள்ளைகளுடைய உயிரிழப்புகளை தடுத்தோம். வாகரைப் பிரதேசத்திலேயே அழிவு நிலையிலே இருந்த பொழுது கருனா அம்மன் வெளிநாட்டில் இருந்தார். நான் இலங்கை பாராளுமன்றத்துக்கு சென்று எனது மாவட்டத்தைச் சேர்ந்த 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் நீங்கள் ஐ.சி.ஆர்.சி உடன் சென்று எனது மக்களை மீட்டுத் தாருங்கள் என்று நான் அவர்களிடம் தெரிவித்திருந்தேன். கதைத்து விட்டு சொல்கின்றேன் என்றவர்கள் மறுநாள் சொன்னார்கள் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது தமிழ்ச்செல்வன் எங்களுடன் பேசி விட்டார் என்றார்கள்.
இவ்வாறுதான் இந்த மண்ணிலேயே இவர்கள் இயங்கினார்கள் ஆனாலும் நாங்கள் விடவில்லை வாகரையிலே யுத்தமிடம்பெறுகின்ற பொழுது அந்த மக்களின் உயிரிழப்புகளை குறைத்தோம். இவ்வாறு பல விடயங்களை நாங்கள் செய்தோம். அது மாத்திரம் இன்றி யுத்தம் முடிந்த கையோடு செய்தோம் 2024 வரைக்கும் நாமும் வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சரும் பல அவிருத்திகளை செய்தோம்.
கடந்த நான்கு ஆண்டுகளிலே 400 கிலோ மீட்டர் கார்பட் வீதிகளை மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைத்துள்ளோம். நூற்றுக்கு மேற்பட்ட பாலங்களை புனரமைத்திருக்கின்றோம். 150 கிலோமீட்டர் கிறவல் வீதிகளை அமைத்திருக்கின்றேம் பல குளங்களைக் கட்டி இருக்கின்றோம். இந்த மண்ணை பொருளாதாரம் ரீதியாக மீட்டெடுப்பதற்காக மெல்ல மெல்ல பல வேலை திட்டங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். ஒன்றும் செய்யவில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
அபிவிருத்திசார், உரிமைசார், விடயங்களிலே செய்ய வேண்டுமாக இருந்தால் பல்லினம் வாழுகின்ற இந்த மாகாணத்திலே உறுதியான அரசியல் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டுமாக இருந்தால், நாங்கள் ஒன்றுபட வேண்டும். ஆகையால்தான் நாம் பொது வெழியில் அழைப்பு விடுக்கின்றோம் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பிலேயே அனைவரும் வந்து ஒன்று சேருங்கள் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாணத்தை பாதுகாப்பதற்கு ஒன்று சேர்வதற்காக வேண்டி அறைகூவல் விடுக்கின்றோம்.
நாங்கள் ஒரு தெளிவான நோக்கத்தோடு நல்ல நோக்கத்தோடு கடந்த காலங்களைப் போல் அழிவு நிலையில் இந்த மக்களை மண்ணையும் விட்டுவிட்டு செல்ல முடியாது. ஆகையால் பல விட்டுக்கொடுப்புகளோடு, அர்ப்பணிப்போடு, பல கசப்பான பாதைகளை கடந்து வந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே இப்பொழுது எழுந்து நிற்கின்ற இந்த சவாலை, கிழக்கு மாகாண சவாலை, எங்களுக்கு எதிராக நிற்கின்ற தலைவர்களின் சவாலை, எதிர்கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயத்தை நிற்கின்றோம். இதனை நாங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இது காலத்தின் கடமை இதன் அடிப்படையில் உணர்வு பூர்வமாக இதனை மக்கள் சிந்திக்க வேண்டும். உணர்வு பூர்வமான செயற்பாடுகள்தான் வெற்றிடியாக இருக்க வேண்டும். மக்களால் முடியாதது ஒன்றுமில்லை. என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த தன்னம்பிக்கையை வைத்துத்தான் மக்கள் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு கூட்டமைப்புக்கு செயற்படும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment