29 Nov 2024

மட்டக்களப்பில் வெள்ள நீர் வடிகின்றபோதும் பாதைகள் தடைப்பட்டுக்கொண்டே இருக்கின்றன இதுவரையில் 1885.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

SHARE

மட்டக்களப்பில் வெள்ள நீர் வடிகின்றபோதும் பாதைகள் தடைப்பட்டுக்கொண்டே இருக்கின்றன இதுவரையில் 1885.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மழை ஓய்ந்துள்ள இந்நிலையில் வெள்ளநீரும் வெகுவாக கடலை நோக்கி வழிந்தோடி வருகின்றது. எனினும் படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான போக்குவரத்துக்கள் வெள்ளிக்கிழமை(29.11.2024) வரையிலும் தடைப்பட்டே உள்ளன. 

இந்நிலையில் பட்டிருப்பு பெரியபோரதீவு பிராதான வீதியில் சூழ்ந்திருந்த வெள்ளம் சற்று வற்றியுள்ளதனால் அவ்வீதியுடாக மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓரளவு போக்குரத்தில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. 

ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சில சிறியகுளக்கட்டுக்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், பல வீதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும், வெள்ளத்தில் அள்ளுண்டுபோயுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6மணி வரையில் உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30அடி 4அங்குலம், உறுகாமத்து குளத்தின் நீர்மட்டம் 16அடி 5அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 19அடி 5அங்குலம், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலம், கித்துள்வெவக் குளத்தின் நீர்மட்டம் 12அடி 1அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 5அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 8அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 30அடி 8அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 1885.7 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

















SHARE

Author: verified_user

0 Comments: