மக்களிடம் வாக்கு பெற்றுவிட்டு மக்களை ஏறெடுத்தும்கூட பார்க்காமல் இருப்பவர்களை மக்கள் பிரதிநிதிகள் என கருத முடியாது வேட்பாளர் வசந்தராஜா.
தமிழர்களுக்கு என்று ஒரு எதிர்காலம் இல்லாமல் உள்ளது தமிழர்களின் நிலப்பரப்பை பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்கின்றார்கள் வடக்கிலும் கிழக்கிலும் இந்து ஆலயங்கள் இருக்கின்ற நிலப்பகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன இவ்வாறான சம்பவங்கள் இனி எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரப்பப்படலாம் இதனால் எமது பிள்ளைகள் எதிர்காலம் பாதிக்கப்படும், நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஏற்படும்.
என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் முன்னாள் தலைவரும், பிரபல சமூக வேவையாளரும், முதலுதவி, அனர்த்த முன்னாயத்தம், உள்ளிட்ட துறைகளின் பயிற்றுவிப்பபாளரும், தற்போது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருமான தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை (25.10.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
நாம் வாழ்வாதாரமாக மேற்கொள்ளும் வயல் நிலங்கள் அனைத்தும் எதிர்காலத்தில் பறிக்கப்படலாம் மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் தற்போது தமது தொழிலை இழந்து நிற்கின்றார்கள். அவர்கள் பரம்பரையாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றவர்கள். அவர்களுடைய கால்நடைகள் வளரும் பகுதியில் வேறு சமூகத்தவர்கள் வந்து குடியமர்ந்துள்ளார்கள். இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தமது கால்நடைகளை வளர்க்க இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் மென்மேலும் நமது பிரதேசங்களில் வேரூன்ற தொடங்கும். அதற்காக வேண்டி தமிழ் மக்கள் தமக்குரிய பிரதிநிதிகளை மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்து அதற்குரிய தீர்வுகளை பெற்றுத் தருவதற்காக வேண்டி திறமையான மிகவும் முன்னோக்கிய சிந்தனை உடைய நபர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும். அதுமாத்திரமன்றி எமது மக்களின் பிரச்சினைகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புலம்பெயர் மக்களிடமும் வெளிநாட்டு தூதரகங்களுடன் பேசி அதற்குரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வல்லமை உடைய நபர்களை நாங்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஐந்து வருடம் உங்களுக்கு ஒருமுறை நமது பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்று விட்டு மக்களை எட்டிப் பார்க்காமல் இருந்தால் மக்களின் பிரச்சினைகள் எவ்வாறு தீர்வது. மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்து அதற்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் வாக்களிக்கின்றார்கள் ஆனால் மக்களிடம் வாக்கு பெற்றுவிட்டு மக்களை ஏறெடுத்தும்கூட பார்க்காமல் இருப்பவர்களை மக்கள் பிரதிநிதிகள் என கருத முடியாது. இவற்றையெல்லாம் கருத்துக் கொண்டு மக்கள் மக்களோடு இருந்து சமூக சேவைகளை மேற்கொள்பவர்களை இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்ய வேண்டும்.
எமது இனத்துக்காகவும், எமது மொழிக்காகவும், எமது உரிமைக்காகவும், எமது அபிவிருத்திக்காகவும் யார் யார் குரல் கொடுக்கின்றார்களோ அவர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும். எனவே நான் இம்முறை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சங்கு சின்னத்தில் இரண்டாம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன். நான் ஒரு சமூக சேவகன் விரும்பினால் எனக்கு மக்கள் வாக்களித்து என்னையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் என்னால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற சமூக சேவையினை பன்மடங்காக்கி மேலும் விஸ்த்தரிப்பு செய்வேன் என்பதை உறுதியளிக்கிறேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment