10 Oct 2024

திறமையும் ஈடுபாடும் கொண்ட தலைமைத்துவ இளைஞர்களை உருவாக்கும் திட்டம்.

SHARE

திறமையும் ஈடுபாடும் கொண்ட தலைமைத்துவ இளைஞர்களை உருவாக்கும் திட்டம்.

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் திறமையும் ஈடுபாடும் கொண்ட தலைமைத்துவ இளைஞர்களை உருவாக்கும் செயல் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்டத்திற்குரிய இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.

இந்த செயல் திட்டத்தின் அமுலாக்க ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்புவவுணதீவு பரமேஸ்வரா வித்தியால பாடசாலை மாணவர்களால் செவ்வாயன்று 08.10.2024 துவக்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் என்.கதிராமத்தம்பி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவுணதீவு கல்வி வலய கல்விப் பிரதிப் பணிப்பாளர் வை.சி. சஜீவன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே.ரகுகரன், ஆலோசனை வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் ரீ.குணரெட்ணம், ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் யாழினி பிரியகாந்தன் அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்டத்திற்குரிய இணைப்பாளர் அனுலா உள்பட பாடசாலையின் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள். பெற்றோர் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பாடசாலையில் ஆரம்பித்து  வைக்கப்பட்ட திறமையும் ஈடுபாடும் கொண்ட தலைமைத்துவ இளைஞர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் பாடசாலையிலுள்ள மாணவர்களால் சுயமாக ஆக்கபூர்வ புத்தாக்க  நிகழ்த்துகைகள் இடம்பெற்றன.

பாடசாலை மட்டத்தில் தலைமைத்துவப் பாங்குக்கான தளத்தை உருவாக்கும் இந்த செயல்திட்டத்தின் மூலமாக இளைஞர்;கள் யுவதிகள் தங்களது தலைமைத்துவப் பாங்கையும் புத்தாக்கக் கண்டு பிடிப்புக்களையும் வெளிக்கொண்டு வர முடியும் என நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றிய அனுலா தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்….. பாடசாலை மட்டத்தில் இளைஞர் யுவதிகள் புத்தாக்கக்கண்டு பிடிப்புகளையும் கலாசார பாரம்பரிய வழக்காறுகளையும் மங்கி மறையாமல் பாதுகாத்து அவற்றை உயிரூட்டுவார்கள். வழமைக்கு மாற்றமாக பாரம்பரிய தலைமைத்துவங்களிலிருந்து விலகி இந்த செயலாற்றுகையின்போது ஒழுங்குபடுத்தலும், பங்கேற்பும், ஆற்றுகையும் மீளாய்வு செய்தலும் சீர் செய்தலும் என அனைத்துச் செயற்பாடுகளும் மாணவர்களின் சுய பங்களிப்புடன் இடம்பெறும் வகையில் செயல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத் தலைமைத்துவங்களான தற்கால மாணவர்களுக்கு இந்த அரிய வாய்ப்பை நாங்கள் உருவாக்கிக் கொடுப்போம் அதன் மூலம் மாணவர்கள் தங்களது திறன்களை, ஆக்கபூர்வ ஆற்றல்களை புத்தாக்கங்களை   வெளிக்கொண்டுவருவர் என அனுலா தெரிவித்தார்.

வவுணதீவு கல்வி வலயத்தில் மேலும் 16 பாடசாலைகளில் இதுபோன்ற செயல்திட்டம் அமுலாக்கம் செய்யப்படவுள்ளன.
























 

SHARE

Author: verified_user

0 Comments: