26 Aug 2024

ஆனந்தகிரி அறப்பணி சபையின் பேராளர் வணக்கத்துக்குரிய சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களின் 47 வது ஆண்டு குருபூசை நிகழ்வு.

SHARE

ஆனந்தகிரி அறப்பணி சபையின் பேராளர் வணக்கத்துக்குரிய சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களின் 47 வது ஆண்டு குருபூசை நிகழ்வு.

மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையின் பேராளர் வணக்கத்துக்குரிய  ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களின் 47 வது ஆண்டு குருபூசை தின நிகழ்வு ஆனந்தகிரி அறப்பணி சபையினரின் ஏற்பாட்டில்  வெள்ளிக்கிழமை  (23.08.2024)  மட்.மயிலம்பாவெளி, காமாட்சியம்மன் ஆலய வீதியில் அமைந்துள்ள வாழும்கலை  நம்பிக்கை கிராமம் பெண்கள் சிறுவர் இல்லத்தில்  உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 

ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் லோ.தீபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் சுவாமியவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து விசேடபூசை நிகழ்வுகள், சுவாமியவர்களை பற்றிய நினைவுரைகள் என்பவை நடைபெற்றது. இதனையடுத்து ஆனந்தகிரி அறப்பணி சபையின் "இயற்கையை நேசிப்போம் ஆளுக்கொரு மரம் நடுவோம்" எனும் செயல்திட்டத்திற்கமைவாக வாழும்கலை நம்பிக்கை கிராமம் பெண்கள் சிறுவர் இல்ல வளாகத்தில் பலன்தரு மரக்கன்றுகள் சுவாமியவர்களின் நினைவாக நடுகைசெய்யப்பட்டது. இதையடுத்து இல்ல சிறார்களுக்கு மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது. 

வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜி அவர்கள் இந்தியாவின் காஸ்மீர் தேசத்தில் அவதரித்து இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் பல ஆலயங்களை ஸ்தாபித்து மக்களுக்கு நல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும், சமய உணர்வுகளையும் , தர்ம சிந்தனைகளையும் புகட்டி சமூகம் மேன்மையுறுவதற்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக திகழ்ந்ததுடன் மக்களால் என்றும் போற்றப்படும் வணக்கத்திற்குரிய மகானாகவும் விளங்கினார். 

 இலங்கையின் திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் செம்பிமலையில் 25.08.1935 இல் செம்பீஸ்வரர் ஆலயத்தினையும், மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயத்தினையும், இக்கிராமத்தின் அயற்கிராமமான செட்டிபாளையம் கிராமத்தில் சோமகலாநாயகி சமேத சோமநாத லிங்கேஸ்வரர் ஆலயத்தினையும் ஸ்தாபித்து மக்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கு வழியமைத்துத்தந்தவர் வணக்கத்திற்குரிய சுவாமிஜி சோமேஸ்வரானந்தகிரி ஆவார். இவர் 1939ம் ஆண்டு மட்டக்களப்பு மண்ணிற்கும் குருக்கள்மடம் மற்றும் செட்டிபாளையம் கிராமங்களுக்கு முதன்முறையாக காலடிபதித்து  ஸ்ரீ கிருஸ்ணன் ஆலயம் மற்றும் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலயங்களில்  இயங்கிவரும் திருவருள் ஆண்கள் - பெண்கள் சங்கங்களை 1940ம் ஆண்டு ஆரம்பித்து வைத்து மக்கள் மத்தியில் ஒழுக்க சிந்தனைகளை பிரசங்க உரைமூலம் நிகழ்த்தி பஞ்சசீல ஒழுக்கங்களை வாழ்வில் கடைப்பிடிக்க வழிகாட்டியவர். இவரின் உயரிய சித்தனைகளையும் நோக்கங்களையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆனந்தகிரி அறப்பணிசபையானது மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமாக பல்வேறுபட்ட சமய, சமூகப்பணிகளை மாதம் ஒரு செயல்திட்டம் எனும் அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

















SHARE

Author: verified_user

0 Comments: