23 Jun 2024

சவால்களைக் கண்டு ஒருபோதும் தப்பியோட வேண்டாம் மட்டக்களப்பு இளையோருக்கு ஜனாதிபதி அறிவுரை.

SHARE

சவால்களைக் கண்டு ஒருபோதும் தப்பியோட வேண்டாம் மட்டக்களப்பு இளையோருக்கு ஜனாதிபதி அறிவுரை.

அடுத்த ஐந்து வருடங்களில் கிழக்கில் பரந்த அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவதற்கான வேலைத் திட்டத்துடன் இணைந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிபளிக்க வேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.

 நாட்டில் வெற்றிகரமான தலைமைத்தும், தலைசிறந்த அரசியல்வாதி என்ற வகையில் ஜனாதிபதி கொண்டிருக்கும் அனுபவங்களுக்கமைய எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் அறிவுரை யாதென மட்டக்களப்பு மாவட்ட இளையோருடனான சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார் 

மட்டக்களப்பு சுற்றுலா விடுதி ஒன்றில் சனிக்கிழமை (22.06.2024) நடைபெற்ற இளையோர் அணி சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். 

இந்தச் சந்திப்பில் பெருமளவான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்ததோடு, அவர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார். 

இதன்போது இளையோர் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பதிலளிக்கையில் 

கேள்வி - நெருக்கடியிலிருந்த நாட்டை மீட்கும் சவாலை எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள், உங்கள் எதிர்கால திட்டம் எவ்வாறானது? நீங்கள் கற்ற கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்க நான் ஆசைப்பட்டடேன். அது கனவாகவே போய்விட்டது. எதிர்கால சந்ததிக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா அல்லது அதற்கு நிகராக ஏனைய பாடசாலைகள் மேம்படுத்தப்படுமா? 

பதில்- அனைவரும் தப்பியோடும் வேளையிலும் நான் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். சுய நம்பிக்கை இருந்தால் எவரும் சவால்களுக்கு அஞ்ச வேண்டியிருக்காது. ஓடுவதற்காக பயன்படுத்தும் சப்பாத்துக்களை, சவால்களை கண்டு அஞ்சி ஓடுவதற்காக பயன்படுத்தக்கூடாது. நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையில் ஏற்றுக்கொண்டேன். நான் பொறுப்பேற்றிருக்காவிட்டால் நாட்டின் நிலை என்னவாகியிருக்கும்? இங்கு இவ்வாறு அமர்ந்து பேசக்கூட சந்தர்ப்பம் இருந்திருக்காது. சவால்களை கண்டு அஞ்சக்கூடாது. ஒருபோதும் ஓடி ஒளியவும் கூடாது. ரோயல் கல்லூரியை போலவே பல பாடசாலைகளின் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. அரசாங்கத்தினால் சிறந்த கல்வியை வழங்க முடியும். ஆனால் முதுகெலும்பை தர முடியாது.  அது தம்மிடம் இருக்க வேண்டும்.  

கேள்வி : நாட்டில் வளங்களிலிருந்தும், பல பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.  நமது தொழிற்சாலைகளை மேம்படுத்த உங்களிடம் எவ்வாறான யோசனைகள் உள்ளன?

பதில் - உங்களுக்கு பிடித்த பாடகர் யுவன் சங்கர் ராஜா என்று சொன்னீர்கள். அப்படியானால் பாடல்களையும் நாம் இறக்குமதி தானே செய்கிறோம்.  திறந்த உலகில் எமது சந்தைகளை வலுவூட்ட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. நமது நாட்டின் உற்பத்திளை ஏற்றுமதி செய்வது குறித்து இதுவரை கவனம் செலுத்தவில்லை.  நாம் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்றுமதிசார் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நெருக்கடி காலத்தில் எம்மிடம் போதிய வெளிநாட்டு கையிருப்பும் இருக்கவில்லை. எரிபொருள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்யவும் வெளிநாட்டு வருவாய் தேவைப்படும். அவ்வாறான தேவைகளுக்காக பெற்றுக்கொண்ட கடனை எம்மால் மீள செலுத்த முடியாமல் போனது.

அதனால் எம்மிடத்திலிருக்கும் வளங்களைப் பயன்படுத்தி அதனூடாக ஏற்றுமதியை பலப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். 

அடுத்தது சுற்றுலாத்துறை. மட்டக்களப்பில் மட்டும் நாம் 100இற்கும் அதிகமான சுற்றுலா ஹோட்டல்களை நிர்மாணிக்கலாம். அதேபோல் விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் ஊடாகவும் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டாலும், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகராவிட்டால் அடுத்த 15 - 20  வருடங்களுக்குள் இதே பிரச்சினைக்கு மீண்டும் முகம்கொடுப்போம். அதற்கான சிறந்த வழியாக விவசாயம், சுற்றுலா துறைகளை மேம்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்வதை இலக்காகக் கொள்ள வேண்டும். அதற்காகவே பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கேள்வி - நீங்கள் சிறந்த தலைவர். தலைசிறந்த அரசியல்வாதி. அதன்படி இளையோரின் எதிர்காலம் சிறப்பதற்கு எவ்வாறான அறிவுரையை சொல்வீர்கள்?

பதில் - நன்றாக கற்க வேண்டும். அறிவார்ந்த சிந்தனை தேவை. கொள்கைகளுக்கு மதிப்பளியுங்கள்.  சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோடாதிருங்கள். என்று ஜனாதிபதி பதிலளித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சிவனேசத்துரை சந்திரகாந்தன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் எச்..இம்.டபிள்யூ. ஜீ.திசாநாயக்க, மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குழேந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர்களையும் சந்தித்தார்.

சுற்றுலாத்துறை, விவசாயம் மற்றும் தொழில்துறை அடிப்படையில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான பரந்த திட்டம் குறித்து வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இந்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து திருகோணமலையை வலுசக்தி மையமாக மாற்றவிருப்பதாகவும் அறிவுறுத்தினார் 

அதேபோல் நாட்டை ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்வதில் கிழக்கு மாகாணம் பிரதான பங்கு வகிக்கும் என்றும்அடுத்த ஐந்து வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் பரந்த அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறு வர்த்தகர்களுடன் hன்போது ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

 





















SHARE

Author: verified_user

0 Comments: