21 May 2024

கிழக்கிலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் பெண்கள் செயலணியினர் நுவரெலியாவுக்கு பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு கற்றல் கள விஜயம்.

SHARE

கிழக்கிலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் பெண்கள் செயலணியினர் நுவரெலியாவுக்கு பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு கற்றல் கள விஜயம்.

திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி  தலைமையில் கிழக்கு மாகாணத்திலிருது பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் பெண்கள் செயலணியினர், நுவரெலியாவுக்கு பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு கற்றல் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகங்களின் ஒத்துழைப்புடன்  சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் மற்றும்  பாம் பௌண்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த கற்றல் அனுபவப் பகிர்வு கள விஜயத்தை ஏற்பாடு செய்திருந்தன.

திருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையிலான பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் பெண்கள் அணியினரை நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபொட நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் வைத்து வரவேற்றார். இதன்போது பரஸ்பரம் நினைவுச் சின்னங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

குழுவினர் மலையக தோட்டத் தொழிலாள மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்களை நேரில் சென்றும் பார்வையிட்டனர்.

மேலும், மலையக மக்களின் அபிவிருத்திக்காக செயலாற்றி வரும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம், ஸ்ரீலங்கா குடும்பத் திட்டச் சங்கத்தின் சுகாதார சேவை நிலையம், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் ஒரு பிரிவாக நிறுவப்பட்டுள்ள மிதுரு பியச ஆலோசனை சேவைகள் நிலையம், பூண்டுலோயா எல்பிட்டிய பிளாண்டேஷன் ஆகிய இடங்களுக்கும் சென்று அங்கு தேவையுள்ளோருக்கு வழங்கப்படும் சேவைகளையும் அறிந்து கொண்டனர்.

இந்தக் கற்றல் கள விஜயத்தின்போது இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார்,  வீ எபெக்ற் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிகாமணி மயூரன், திட்ட முகாமையாளர் ஆர். றிசாந்தி, திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட பெண்கள் அபிவிருத்தி அலுவலர்களான சுவர்ணா தீபானி, ரசிக்கா ஜயசிங்ஹ,  பாம் பௌண்டேஷன் நிறுவனத்தின் பிரதி குழுத் தலைவர் சந்திமா அபேவிக்கிரம உள்ளிட்ட பலரும் பங்குபற்றியிருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: