4 Dec 2023

இளையோர்களின் பங்களிப்பின்றி சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்தி எதுவும் நடக்காது - அஜானி.

SHARE

இளையோர்களின் பங்களிப்பின்றி சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்தி எதுவும் நடக்காது - இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி.

இளையோர்களின் பங்களிப்பின்றி சமூக, பொருளாதார, கலாச்சார அபிவிருத்தி என்று எதுவுமே நடக்காது என சேர்க்கிள் (CIRCLE) இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.

இயற்கைiயைப் பாதுகாப்பதில் இளையோர் ஒன்றிணைவோம்எனும் செயல்பாட்டுத் தொனியில் அமைந்த செயலமர்வில் அவர் உரையாற்றினார்.

இயற்கையைப் பாதுகாப்பதன் நிமித்தம்  சுற்றுச் சூழலைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் இளையோருக்குத் தெளிவூட்டும் செயலமர்வும் நடைமுறைத் திட்டங்களும் மட்டக்களப்பு வை.எம்.சி. மண்டபத்தில் திங்கட்கிழமை (04.12.2023) ஆரமபித்து வைக்கப்பட்டது.

அதில் இளையோர் அணியாகச் செயற்படும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 30 இளைஞர் யுவதிகள் செயல்பாட்டு செயலமர்வில் பங்கு பற்றினர்.

அங்கு செயலமர்வில் தொடர்ந்து உரையாற்றிய நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானிசுற்றுச் சூழலைப் பற்றிய தெளிவான புரிதலையும் அறிவையும் பெற்று சமகால உலகின் போக்கை மாற்றுவதன் மூலம்தான் எதிர்கால உலகத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மக்கள் தொகைப் பெருக்கம் அதற்கீடாக இடம்பெறும் அபிவிருத்திகளால் எம்மைச் சுற்றியுள்ள சூழல் தொகுதி பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. பல்லுயிர்த்தன்மை சவால்களை எதிர்கொண்டுள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல இந்த இலகின் இன்ன பிற உயிர்களும் செடி கொடி மரங்களும் வாழ லாயக்கற்ற இடமாக இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கின்றது.

இந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்யாமல் மனிதர்கள் பல தசாப்தங்களாகத் தவறிழைத்திருக்கிறோம். அதன் பின்விளைவுகளை தற்போது உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காலநிலை மாற்றம் சிறந்தொரு உதாரணமாகும். இப்படி மனிதர்கள் இயற்கைக்குச் செய்கின்ற தீங்குகள் தொடர்ந்தால் மனித குலத்தில் தோன்றப்போகும் எதிர்கால சந்ததிகள் இப்பூமிப் பந்தில் வாழமுடியாது போகலாம்.

மனிதர்களைத் தவிர சூழலில் உள்ள மற்ற அனைத்து பல்லுயிரிகளும் இயற்கைக்கு கேடு விளைவிப்தில்லை. ஆயினும் மனிதர்களே மனித வாழ்வியலுக்கும் மற்ற உயிரினங்களின் வாழ்வையும் அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இனிமேலும் இது தொடர அனுமதிக்கக் கூடாது.

குறிப்பாக நிலம், நீர், வளி என்பனவற்றை தற்போது இருக்கும் நிலையிலாவது அவற்றைத் தக்க கொள்ளப் பாடுபடவேண்டும். சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப இயற்கை வளங்களை நாசப்படுத்தாமல் பயன்படுத்த வேண்டும்.

இளையோர்கள் சமகாலத்தில் உலகம் எதிர் நோக்குகின்ற சவால்களான இயற்கை சக்தி மூலங்களின் பற்றாகுறை, உணவு, சூழல் சார்பான புரிதலை கொண்டிருப்பதுடன், மாற்று சக்தி வழிமுறைக்கான தெளிவை பெற்றிருத்தல் என்பதும் காலத்தின் தேவையாகும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் ஒருபோதும் கேடு நெருங்காதுஎன்றார்.

செயலமர்வின் நிறைவில்  இயற்கையைப் பேணும் வகையில் களுவன்கேணி, மகிழவெட்டுவான், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுஇடங்களில் பயன்தரும் மரங்கள் செயற்பாட்டு இளைஞர் அணியினரால் நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் வளவாளராக விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டப் பிரிவின் அதிகாரி ஆர். பேரரங்கன் வளவாளராகக் கலந்து கொண்டதுடன்சேர்க்கிள் (CIRCLE)  இளம் பெண்கள் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் வி. அனுஷியா உட்பட இளையோர் அணியின் செயற்பாட்டாளர்களான தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் 30 பேர்  பங்குபற்றினர்.SHARE

Author: verified_user

0 Comments: