எப்பொழுதுமே மக்களின் பங்குபற்றலோடு ஆலோசனைகளோடு ஒத்துழைப்போடு திட்டங்களைத் தீட்டும்பொழுது அது வெற்றியளிக்கும் தம்பலகாமம் பிரதேச சபைத் தலைவர் ஏ.ஜி. சம்பிக்க பண்டார.
அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத் தயாரிப்பை மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளிப்படைத் தன்மையோடு செய்யப் போகின்றோம் என தம்பலகாமம் பிரதேச சபைத் தலைவர் ஏ.ஜி. சம்பிக்க பண்டார தெரிவித்தார்.
பிரதேச மக்களது திட்ட முன் மொழிவுகளை உள்வாங்கி வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பயிற்சிச் செயலமர்வு திங்கள் செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த பயிற்சிச் செயலமர்வில் அப்பிரதேச சபைத் தலைவர் ஏ.ஜி. சம்பிக்க பண்டார, செயலாளர் பி.யூ.ஏ.எஸ். உடகெதர, பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.ஏ. வாஹித் உட்பட பிரதேச சபையின் தற்போதைய உறுப்பினர்கள், வட்டாரங்களிலுள்ள சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சன சமூக நிலைய உறுப்பினர்கள், பெண்கள் இளைஞர் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சிச் செயலமர்வை ஆரம்பித்து வைத்து மேலும் உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர்
எப்பொழுதுமே மக்களின் பங்குபற்றலோடு ஆலோசனைகளோடு ஒத்துழைப்போடு திட்டங்களைத் தீட்டும்பொழுது அது வெற்றியளிக்கும். அத்துடன் பிரதேச சபை நிருவாகத்திற்கும் மக்களுக்குமான தொடர்பாடல் சிறந்ததாக இருக்கும் பொழுது பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது இலகுவாக இருக்கும். அதனால் மக்களும் மிகுந்த நன்மை அடைவார்கள். பிரதேச சபையும் வலுப்பெறும்.
இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக நிதி அனுசரணை செய்து பயிற்சிகளை வழங்குவதையும் சமூக மட்ட அமைப்புக்களையும் சிவில் சமூகத்தையும் இணைப்பாக்கம் செய்வதிலும் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பு ஈடுபட்டுள்ளது. எனவே ஒட்டு மொத்த தம்பலகாமம் பிரதேச மக்களின் சார்பில் அந்த அமைப்பினருக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும் என்றார்.
பயிற்சிச் செயலமர்வின் இறுதியில் மக்கள் பங்கேற்புடனான வரவு செலவுத் திட்டத்திற்காக பிரதேச மக்களால் முன்னுரிமை அடிப்படையில் தேவைகள் அடையாளம் காணப்பட்டு தம்பலகாமம் பிரதேச சபை தலைவர் உறுப்பினர் உள்ளிட்ட நிருவாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வேலாயுதம் மோகனின் இணைப்பாக்கத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிச் செயலமர்வில் உள்ளுராட்சித் திணைக்கள சிரேஷ்ட சமூக அபிவிருத்தி அலுவலர் சட்டத்தரணி அன்பழகன் குறூஸ் வளவாளராகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார். யூ.எஸ். எய்ட் சர்வதேச உதவி அமைபபு இத்திட்டத்திற்கு நிதி அனுசரணை வழங்கி வருகின்றது.
பிரதேச சபைகளுக்குக் கிடைக்கக் கூடிய நிதி, அச்சபை கொண்டுள்ள பௌதீக, மனித வளங்களை வினைத்திறனாகவும் செயற்திறனாகவும் பயன்படுத்தி பிரதேச மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் செயற்திட்டமாக இந்த செயலமர்வுகளை இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வ உதவு ஊக்க அமைப்பு நடத்தி வருகின்றது.
0 Comments:
Post a Comment