26 Sept 2022

நாட்டுக்காக போராடியவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் – பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் – சாணக்கியன்

SHARE

நாட்டுக்காக போராடியவர்கள் பயங்கரவாதிகள் அல்லர் – பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் – சாணக்கியன்.

சிஸ்டம் சேஞ்ச் (முறைமை மாற்றம்) கோரி போராடியவர்கள் இன்று தண்டிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டுக்காக போராடிய அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் கையொப்பமிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், ‘பயங்கரவாத தடைச்சட்டம் என இச்சட்டத்துக்கு பெயர் இருந்தாலும், பயங்கரவாத தடுப்புக்கு எதிராக பயன்படுத்துவதில்லை.

மாறாக சாதாரண மக்கள் தற்போது இலக்கு வைக்கப்படுகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்திலுள்ள சரத்துகள் பயங்கரமானவை. வழக்கு தொடுக்காமல் பல வருடங்கள் தடுப்பில் வைத்து விசாரிக்கலாம், பயங்கரவா தடைச்சட்டத்தின்கீழ் கைதான ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை நீதிமன்றத்தை சாட்சியாக பயன்படுத்தலாம்.
இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் கையெழுத்து போராட்டத்தை நாம் மார்ச் மாதமே ஆரம்பித்துவிட்டோம்.

ஏனெனில் இந்த சட்டம் மக்கள்மீது பாயும் என்பது எமக்கு தெரியும். தமக்கு விசுவாசமான வியாபாரிகளுக்கு அரசாங்கம் வரிச்சலுகை வழங்கும்போதே, இந்நாடு வங்குரோத்தடையும் என்பது எமக்கு தெரியும். அந்நிய செலாவணிமீது கைவைத்தபோது, வரிசை யுகம் உருவாகும் என்பதும் தெரியும்.

இதற்கிடையில் மக்கள் எழுச்சி போராட்டம் வெடித்தது. நாட்டுக்காக போராடிய இளைஞர்கள் இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ், தண்டிக்கப்படுகின்றனர். வசந்த முதலிகே பயங்கரவாதியா? போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகளா?

உண்மையான பயங்கரவாதிகள் யார்? உரத்தை இல்லாது செய்தது யார், அந்திய செலாவணியை இல்லாது செய்தது யார், வரிசை யுகத்தை உருவாக்கியது யார், குழந்தைகளுக்கு பால்மாவை இல்லாது செய்தது யார், இவர்களே உண்மையான பயங்கரவாதிகள்.’ எனத் தெரிவித்துள்ளார். 










SHARE

Author: verified_user

0 Comments: