உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் பங்கேற்புடனான பாதீடு வரவு செலவுத் திட்டம் தயாரித்தல் பயிற்சி நெறி.
மக்களுடைய, அதிகாரிகளுடைய, அரசியல் பிரதிநிதிகளுடைய முழுமையான பங்களிப்புக் கிடைப்பதை உறுதி செய்து நிலையான அபிவிருத்தி இலக்கை அடைந்து கொள்ளும் நோக்கோடு உள்ளுராட்சி மன்றங்களில் மக்கள் பங்கேற்புடனான பாதீடு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் பயிற்சி நெறிகள் இடம்பெற்று வருவதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் பொன். சற்சிவானந்தம் தெரிவித்தார்.
இவ்வாறான செயல் திட்டத்திற்கு மூதூர் பிரதேச சபையினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்குள்ள பௌதீக, மனித வளங்களை வினைத்திறனாகவும் செயற்திறனாகவும் பயன்படுத்தி பிரதேச மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு அமைந்த இந்தப் பயிற்சிச் செயலமர்வு மூதூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் ஞாயிறன்று 25.09.2022 இடம்பெற்றது.
நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ. அறூஸ், உப தவிசாளர் எஸ். துரைநாயகம், சபையின் செயலாளர் வி. சத்தியசோதி, பிரதேச சபை முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள், அதிகாரிகள் பொதுமக்கள், வரியிறுப்பாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதேச மக்களின் சமூக பொருளாதார சுகாதார பொது வசதிகள் காணி கட்டிடங்கள் பொதுப்பயன்பாட்டு நலன்புரி சேவைகள் என்பனற்றை வழங்குவதோடு அவற்றை கண்காணிப்பதனூடாக நிலையான அபிவிருத்தி இலக்கை அடைவதே நோக்கம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமாக ஆசியா பௌண்டேஷன் நிதி அனுசரணை வழங்குகின்றது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர், மக்கள் பிரதிநிதிகள்;, பிரதேச சபையின் நிருவாக அலுவலர்கள் பொதுமக்கள் வரியிறுப்பாளர்கள் ஆகிய தரப்பாருக்கு உள்ளுராட்சி நிருவாகம் சம்பந்தமான அடிப்படை சட்ட திட்ட ஏற்பாடுகளை விளக்கி பிரதேச மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தொடர்ச்சியாக ஆராயும் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
பயிற்சிச் செயலமர்வின் இறுதியில் மக்கள் பங்கேற்புடனான பாதீடு வரவு செலவுத் திட்டம் முன்னுரிமையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு அது மூதூர் பிரதேச சபை நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment