சர்வதேச பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை மாணவி வெற்றி
ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம் நடாத்திய 06 - 10 வயதினருக்கிடையில் இந்தியா, மலேசியா, கனடா, இலங்கை, அமெரிக்கா, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து, கட்டார் , மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா உட்பட 26 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற உலகலாவிய பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச ரீதியில் வெற்றி பெற்ற இலங்கை சார்பில் கலந்து கொண்ட சம்மாந்துறை அல்- அர்சத் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவியான ஜலீல் பாத்திமா மின்ஹாவுக்கும் இவருக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் அவரது பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் திங்கட்கிழமை பாடசாலையில் பாராட்டி கௌரவிக்கும் விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.இம் மாணவி இதற்கு முன்னர் தமிழ்நாட்டு இலக்கிய கழகம் வழங்கிய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கனவுக் கண்ணி விருது, தமிழ் நாட்டு அரசின் இளமாமணி காந்தி விருது மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த மாணவர் விருது போன்றவைகளையும் சுவீகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இளம் இலக்கிய ஆர்வலர், கவிதைகள் படைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மின்மினியின் கீறல்கள் எனும் கவிதைப் புத்தகத்தினையும் மிக விரைவில் வெளியிடவும் ஏற்பாடுகளைச் செய்தும் வருகிறார்.
இவர் சம்மாந்துறை தேசபந்து ஜலீல் ஜீ , எம்.ஆயிஷா தம்பதிகளின் ஏக புதல்வியுமாவார். இவர் சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் துறைசிறார் கலைக் கழகத்தின் பிரதித் தலைவியாகவும் பிரதேச செயலாளர் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment