மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதே தற்போதைய உடனடித் தேவை பூ.பிரசாந்தன்.
உணவுத் தேவைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்படாமல் தடுத்து அவர்களை பாதுகாப்பதுவே உடனடித் தேவையாக உள்ளது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த விஷேட கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை(06) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் எரிவாயு, எரிபொருள், அடிப்படை பாவனைப் பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையினை சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் செய்வதை விடுத்து மக்களுக்கான சேவைகளை வழங்க அனைவரும் முன்வர வேண்டும் குறிப்பாக மக்கள் அரசியல் தலைவர்களை தெரிவு செய்வது தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருவார்கள் என்பதற்காகவே. மாறாக தங்களது அரசியல் ஆசனங்களை சூடாக்கி கொண்டு மக்களை குழப்பி அதில் குளிர்காய்வதற்காக அரசியல் தலைவர்கள் வேண்டும் என்று மக்கள் தெரிவு செய்வதில்லை.
ஆனால் இன்று சில அரசியல் தலைவர்கள் தங்களது நிலைமையை மறந்து தாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதையும் மறந்து வெறும் அரசியல் வார்த்தைகளை மாத்திரம் பயன்படுத்தி மக்களை சூடாக்கி அதில் குளிர்காய முற்படுவது வேதனைப்பட வேண்டியதாக இருக்கின்றது.
எரிவாயு பற்றாக்குறையினால் சமைக்க முடியாமல் தத்தளித்த மக்கள் கேஸ் பெறுவதற்காக வரிசையில் நின்றால் அவ்விடத்திற்குச் சென்று அவர்களை குழப்பி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அலுவலகத்திற்கு அல்லது பிரதி அமைச்சர் வியாளேந்திரனின் அலுவலகத்திற்குச் சென்றால் கேஸ் கிடைக்கும். வாருங்கள் செல்வோம் என்பதும் அதே போன்று அரசாங்க அதிபரிடம் முறையிடுவது பிரதேச செயலாளரிடம் முறையிடுவது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்ய வேண்டிய தேவைப்பாடு இல்லை. சாதாரண கிராமச் சங்க தலைவர் கூட இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் . அதிகாரத்தை பயன்படுத்தி தங்களால் முடிந்தால் மக்களுக்கு எரிவாயு பெற்றுக்கொடுக்க வேண்டும் அல்லது மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர மக்களை ஏமாற்றி அரசியல் செய்கின்ற செயற்பாடுகளை முற்றுமுழுதாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இது அரசியல் செய்கின்ற தருனமல்ல மக்கள் அன்றாட தேவைக்காக கையேந்தி நின்ற நிலைமையினை ஏற்படுத்தாமல் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசியல் கொள்கை இன மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றாக இணைந்து மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முனைகின்ற தருணமாக இந்த தருணத்தை பார்க்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு
மட்டக்களப்பு மாவட்டம் பல இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட மாவட்டம் குறிப்பாக அதிகமான நிலங்களும் நீர் வளம் இருக்கின்றது இதனை பயன்படுத்தி எவ்வாறு எதிர்நோக்குகின்ற உணவு தட்டுப்பாட்டில் இருந்து மக்களை பாதுகாக்க அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் சிந்திக்கவேண்டும்.
பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற காணிகளை பயன்படுத்தி விவசாய குறிப்பாக தானிய உற்பத்திகளை எவ்வாறு அதிகரிக்கலாம் குறுக்கால பயிர்ச்செய்கையினை எவ்வாறு ஊக்குவிக்கலாம் வீட்டுத் தோட்டங்களை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் அப்போதுதான் சிறந்த ஒரு எதிர்கால சந்ததியை உருவாக்க கூடிய நிலைமை ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment