26 Jan 2022

கோலாகலமாக நடைபெற்ற வாழைச்சேனை பிரதேச செயலக தமிழர் பாரம்பரிய பொங்கல்விழா.

SHARE

கோலாகலமாக நடைபெற்ற வாழைச்சேனை பிரதேச செயலக  தமிழர் பாரம்பரிய பொங்கல்விழா.

கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலகம் வருடம் தோறும் நடாத்தி வருகின்ற தமிழர் பாரம்பரிய பொங்கல் விழா நிகழ்வானது கடந்த 19.01.2022ம் திகதி புதன்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக முன்றலில் மிகவும் கோலாகலமான முறையில் தமிழர் பாரம்பரிய  பண்பாட்டு கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.  கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.அமலினி கார்த்தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கோறளைப்பற்று பிரிவிலே உள்ள 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து  ஆலய நிர்வாகிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பங்குபற்றலுடன் பல்வேறுபட்ட வகையிலான பொங்கல்களும், பிரதேச செயலகம் சார்பாக பிரதான பொங்கலும் சிறப்பிடம் பெற்றன.

இந்நிகழ்வில்  ஆசியுரையினையும், சிறப்புரையினையும் ஆறுமுகத்தான் குடியிருப்பு அருள்மிகு மாவடிப்பிள்ளையார், பத்திரகாளியம்மன் ஆலயங்களின் பிரதமகுரு  ஈசான சிவாச்சாரியார்.சிவஸ்ரீ. சின்னையா கிருபாகர குருக்கள் நிகழ்த்தினார். அத்துடன் கலைநிகழ்வுகளை கண்ணகிபுரம் முத்தமிழருவி அறநெறிப்பாடசாலை மாணவர்களும், கண்ணகிபுரம் அபினயம் நடன கலைமன்ற மாணவர்களும், புதுக்குடியிருப்பு சேக்கிழார் அறநெறிப்பாடசாலை மாணவர்களும், கொண்டையன்கேணி ஸ்ரீபதி அறநெறிப்பாடசாலை மாணவர்களும்,  கறுவாக்கேணி விபுலானந்தா அறநெறிப்பாடசாலை மாணவர்களும் நிகழ்த்தினர். பாரம்பரிய உடு இசைக்கும் நிகழ்வினையும் சூரிய பகவானுக்குரிய பூசைவழிபாட்டினையும் செந்தமிழாகம முறையில் மட்டக்களப்பு தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பினரும் நடாத்தினர். இறுதியில் பொங்கல்விழா கலைநிகழ்வுகளில்  பங்குபற்றியவர்களை பாராட்டும் வகையில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், கிராமமட்ட அமைப்புகளும், ஆலயங்களின் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.       















    

SHARE

Author: verified_user

0 Comments: