5 Jul 2021

பஸில் ராஜபக்ஸ நாடாளுமன்றம் வந்தால் அது மேலும் வலுச்சேர்க்கின்றதாக அமையும் - பிள்ளையான் எம்.பி.

SHARE

பஸில் ராஜபக்ஸ நாடாளுமன்றம் வந்தால் அது மேலும் வலுச்சேர்க்கின்றதாக அமையும்பிள்ளையான் எம்.பி.

பஸில் ராஜபக்ஸ அவர்கள் இந்த அரசாங்கத்தின் ஒரு பிரதானமான பங்குதாரர், அவர் நாடாளுமன்றம் வந்தால் இன்னும் அது வலுச்சேக்கிறதாக அமையும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்கள் தெரிவிக்கும் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது என  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்திற்குபட்பட்ட ஆனைகட்டியவெளி  - சின்னவத்தை 2 கிலோமீற்றர் நீளம் கொண்ட பிரதான வீதி அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு ஒரு இலெட்சம் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் காபட் வீதியாக செப்பனிடுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(02) மாலை இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இதன்போது பிரதம அதிதியாகக் காலந்து கொண்டு வீதியின் அபிவிருத்திப் பணிக்கான அடிக்கல்லை நட்டுவைத்தார்.

5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ள குறித்தவீதியின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துவிட்டு அப்பகுதியிலுள்ள எல்லைப்புறக் கிராமங்களின் நிலமையை ஆராய்ந்து மக்களின் குறைநிறைகளையும் நேரில் சென்று கேட்டறிந்தார். இதன்போது அப்பகுதியிலுள்ள விவசாயக் குளத்தை அபிவிருத்தி செய்தல், சின்னவத்தை கிராமத்தில் பழுதடைந்துள்ள பாலர்பாடசாலைக் கட்டடத்தை புணரமைத்தல், ஆலயத்தின் கட்டுமானப் பணிக்கு உதவுதல், உள்ளிட்ட பல கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம், முன்வைத்தனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

சுபீட்சத்தின் நோக்கு ஒரு இலெட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் ஆனைகட்டியவெளி சின்னவத்தை கிராமத்துக்களான 2 கிலோ மீற்றர் நீளம் கொண்ட பிரதான வீதிக்கான அபிவிருத்திப் பணிகளை நாம் ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். இதன் அபிவிருத்திப் பணிகள் மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும். இப்பிரதேசத்தில் மிகவும் முக்கியமான வீதியாகவும், மழைகாலத்தில் மூழ்கடிக்கப்படும் இவ்வீதி தற்போது புணரமைக்கப்படுவதையிட்டு இப்பகுதி மக்களும் மிகவும் சந்தோசமடைந்துள்ளதையும் எம்மால் உணரக்கூடியதாகவுள்ளது.

இயற்கை உரப்பாவனை என்பது மக்களைக் கஸ்ற்றப்படுத்த வேண்டும் என எடுக்கப்பட்ட முடிவல்ல. இது நாட்டு மக்களுக்குத் தேவையான ஒரு முடிவாகும். ஏனெனில் இரசாயன உரப் பாவனைகளால் நமக்குத் தெரியாமலேயே தொற்றா நோய்கள் அதிகரித்துள்ளன. இரசாயனங்கள் தண்ணீரில் கலப்பதனால் சிறுநீரகப் பாதிப்பும் அதிகரித்துள்ளது. எனவே இதனை தொடர்ந்து அனுமத்தித்தால் ஒரு பலவீனமாக மக்களைத்தான் நாம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவேண்டி வரும். மக்களும் வருத்தங்களுக்குத் தீர்வுகாண வைத்தியசாலைகளுக்குச் செல்கின்றார்களே தவிர இதனை நிரந்தரமாக முடிவுறுத்துவதற்கான விடையங்கள் தொடர்பில் ஆராயவில்லை. குறிப்பான விவசாயிகளும், நஞ்சு என தெரிந்தும் அதனை சாப்பிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

ஜனாதிபதி ஒரு இறுக்கமான காலகட்டத்தில் இந்த முடிவை எடுத்திருக்கின்றார். இதனை அமுலாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சி என்ற அடிப்படையில் எனக்கும் இருக்கின்றது. இரண்டாவது உலக மகா யுத்ததிற்குப்; பின்னர்தான் இந்த செயற்கை உரம் எல்லாம் கண்டு பிடித்தார்கள். அதற்கு முன்னர் எமது மூதாதையர்கள் எவ்வாறு விவசாயம் செய்தார்கள். பின்னர் யுத்தம் இடம்பெற்ற காலங்களிலும் ஆங்காங்கே சிறிய அளவிலான உரங்கள்தான் பாவனையிலிருந்தன.

அதுபோல் உரிய முறையில் விவசாயம் செய்தால் மண்ணை மலட்டுத்தன்மையிலிருந்து பாதுகாக்கலாம் என மண்ணை நேசிக்கின்ற விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் பெரிய பெரிய முதலாளிமாரும், உரம் இறக்கும் கம்பனிகளும்தான் இதனை பலமாக எதிர்க்கின்றார்கள். இம்முறை விவசாயம் செய்து கொண்டிருக்கின்ற விவசாயிகளுக்கு உரம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது அதற்கு உரம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிலர் உரத்தை பதுக்கியும் வைத்துள்ளார்கள்.

விவசாய  அமைச்சர் அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து இங்குள்ள நிலமைகளை அவதானித்தார். குறிப்பாக நெல்லின் விலை, அரிசியின் விலை அதிகரிக்காமல் செல்வது, சேதனைப் பசளை பாவனைகளை அமுல்படுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்துகொண்டு சென்றுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் போகத்திற்கு அனைவரும் சேதனைப் பசளை உற்பத்தியில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும். இதனால் ஆரோக்கியமான நமது சமூதாயத்தைக் கட்டியெழுகப்பலாம். என தெரிவித்த அவர்.

பஸில் ராஜபக்ஸ அவர்கள் இந்த அரசாங்கத்தின் ஒரு பிரதானமான பங்குதாரர் அவர் நாடாளுமன்றம் வந்தால் இன்னும் அது வலுச்சேக்கிறதாக அமையும். எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்கள் தெரிவிக்கும் கருத்து வேடிக்கையாக இருக்கின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: