14 Jul 2021

1700 ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை திறக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள்,மற்றும் அதிபர்கள்,கல்விசாரா உத்தியோகஸ்தர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் செவ்வாய்கிழமை (13)   காலை முதல் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்கீழ் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி, சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை, கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலை, கருப்பக்கேணி விபுலானந்தா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இதன்போது கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாரின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதனின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகஸ்தர்கள்  இந்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் 1700 ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.






 

SHARE

Author: verified_user

0 Comments: