15 Mar 2021

நாங்கள் விரைவாக எங்களுடைய பகுதிகளை கட்டியெழுப்பவேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கின்றோம் - என்கிறார் சந்திரகாந்தன் எம்.பி.

SHARE

நாங்கள் விரைவாக எங்களுடைய பகுதிகளை கட்டியெழுப்பவேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கின்றோம் - என்கிறார்  சந்திரகாந்தன் எம்.பி.நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளை கேட்டு துப்பாக்கி ஏந்தி போராடினோம். எமது மாவட்டத்தின் இளைஞர்கள் பலர் மரணித்திருக்கின்றனர். அவர்களின் நோக்கம் கிழக்கிலே வாக்குகளை பெறுவதாகும். சாணக்கியன் போன்றவர்களை பயன்படுத்தி சுமந்திரன் வாக்குகளை பெறவேண்டும். தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவியை சுமந்திரன் பெறுவதற்காக அவரை பயன்படுத்துவார். கட்சிக்குள் பலத்தினை கூட்டுவதற்கே பார்க்கின்றனர். என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கத்தின் வேலைத்திட்டங்களில் ஒன்றான ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை அமைக்கும் “இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்” வேலைத்திட்டத்தின் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

கிராமத்தில் வாழும் மக்கள் தமது உற்பத்திப்பொருட்களை இலகுவில் கொண்டுசென்று சந்தைப்படுத்தவும்,மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும் இந்த கிராமிய பாலங்கள் அமைக்கும் பணிகளை ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பிரதமரின் தலைமையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேடன்குளம் வீதியில் உள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள்  சனிக்கிழமை (13) ஆரம்பித்துவைக்கப்பட்டன. சுமார் 15மில்லியன் ரூபா செலவில் இந்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளரும், பொறியியலாளருமான  திருமதி.கலைவாணி வன்னியசிங்கம், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரும்,சட்டத்தரணியுமான திருமதி. மங்களா சங்கர்,கட்சியின் செயலாளர் எஸ்.ஜெயராஜ்,பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

நாங்கள் விரைவாக எங்களுடைய பகுதிகளை கட்டியெழுப்பவேண்டிய பாரிய பொறுப்பில் இருக்கின்றோம். இந்த நாட்டின் கௌரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் சுபீட்சத்தின் நோக்கு என்ற வேலைத்திட்டத்தை முன்வைத்தார்.அதன் அடிப்படையில் தான் பலவிதமான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர் ஆட்சியை பொறுப்பேற்று சிறிது காலத்திலேயே கொவிட் பிரச்சினை பூதாகரமாக எழுந்தது. கொவிட்-19 ஆனது உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் தாக்கம் செலுத்தியதன் காரணமாக பாரியளவான பொருளாதார இழப்புகள் ஏற்பட்டன. இதற்கிடையிலும் அரசாங்கம் தனது பணிகளை சிறப்பாக செய்துகொண்டிருக்கின்றது.

ஒருஇலட்சம் வீதிகள் திட்டத்திலே எங்களுக்கு 300வீதிகள் வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கான பணிப்புரை வந்தது. 50வீதிகளுக்கான வேலைத்திட்டத்தினை தற்போது ஆரம்பித்திருக்கின்றோம். அதேபோல கௌரவ இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களுக்கும் கிடைத்திருக்கின்றது.

ஒருஇலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் வவுணதீவில் ஐம்பத்து ஐந்து பேருக்கு வேலை வழங்கியிருக்கின்றோம். ஆகவே சமுர்த்தி திட்டத்தில் ஐம்பத்து ஐந்து குடும்பங்கள் குறைக்கப்படும். போக்குவரத்து பிரச்சினை,குடிநீர் பிரச்சினை, மலசலகூடம் இல்லாத, பொதுவசதிகள் இல்லாத பிரச்சினைகள் வந்திருக்கின்றன. இருந்தாலும் நாங்கள் இதனை மாற்ற வேண்டும்.

ஆயுதத்தையும்,நம்மையும் பிரிக்கமுடியாது.ஆயுதக்குழு என்பது விடுதலைப்புலிகளும் ஆயுதக்குழுதான்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ஆயுதக்குழுதான். ஆயுதக்குழு என்பது நமது தேவைக்காக நிகழ்ந்த சம்பவத்தினூடாக நம்மீது கட்டாயமாக திணிக்கப்பட்ட விடயமாகும். தற்போது அந்தத் தேவை மாறி அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரு சமூகம் மாறுவதற்குரிய பிரதான பங்கு ஒரு அரசியல் இயக்கத்தினுடையதாகும். அந்த இயக்கம் தான் நாங்களாவோம். எங்களுக்கும் திட்டங்கள் இருக்கின்றது. நாங்கள் பல வயல்களையும் வைத்துக்கொண்டு உன்னிசைக் குளத்தினையும் வைத்துக்கொண்டு தண்ணீர் இல்லை என்று சொல்வது பிழையான விடயமாகும். காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லா இருந்தார்.  அவர் அங்கு தண்ணீரை கொண்டு சென்றார். உங்களுக்கென்று யாருமிருக்கவில்லை.

மகிழவெட்டுவான் ஒரு பாரம்பரிய கிராமமாகும். ஐந்து வருடம் நல்லாட்சியில் இருந்தவர்கள் அங்கு இரண்டு வீதிகளையும் புனரமைக்கவில்லை. அங்கு பாடசாலையின் நிலையும் மோசமாகவுள்ளது. யோகேஸ்வரன் அவர்களின் சொந்த ஊரிலே இம்முறை முதலாம் தரத்திற்கு இரண்டு பிள்ளைகள் மட்டுமே பாடசாலைக்கு போகுது. சமூகத்தில் வந்து வாக்கு கேட்டு வென்ற தலைவர்கள் தங்களுடைய கிராமத்தையே கட்டியெழுப்பவில்லை என்றால் அவர்களின் அரசியல் தோல்வியடைந்த ஒன்றாகும்.

இன்று சாணக்கியன் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களை பேசிவருகின்றனர். எந்தவொரு  வேலைத்திட்டத்தினையும் தமிழ்மக்களுக்கு செய்யாமல்,வீதிகளை அமைத்து குளங்களை அமைத்து நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து அவன் வருகின்றான், இவன் வருகின்றான், விகாரைகளை அமைக்கின்றான் என்று கூறினால் என்ன மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்தப் போகின்றீர்கள்.நாங்கள் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களையே சொல்கின்றோம்.நாங்கள் மாற வேண்டும் வேறு எவரதும் கால்களைப் பிடிக்கத் தேவையில்லை.

இன்று பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டக்களப்பில் மதுபானசாலைகள் இருக்கின்றது.அதனை நாங்கள் இங்கு சொல்ல விரும்பவில்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்கள் நலன் சார்ந்த மக்களை முன்னேற்றுகின்ற பலப்படுத்துகின்ற கட்சியாகும். எங்கள் வேலைத்திட்டம் மிகத் தெளிவானது.அடுத்தமுறை எமது மாவட்டத்திற்கு ஜனாதிபதி அவர்கள் வருவாரானால் தொழில் வாய்ப்பை பெருக்குவதற்கு, தொழிற்பேட்டைகளை அமைக்கலாமா,இங்கேயே 20ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கினால் வேறு ஊரிலிருந்து ஆட்களை எடுக்கலாமா,நாங்கள் முதலில் வவுணதீவு, கரடியனாறு போன்ற பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்வோம்.இதற்காக 400மில்லியன் ரூபா பணம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

நாங்கள் முதலில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். சில இடங்களில் பெற்றோர்கள் அப்பம் சுட்டு, கோழி வளர்த்து பிள்ளைகளை படிப்பிக்கின்றனர்.ஆனால் சில இடங்களில் அதிக வருமானம் இருந்தும் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கவனம் எடுப்பதில்லை. சமூகப் பொறுப்பல்லாமலே சில விடயங்கள் நடக்கின்றன. பிள்ளைகள் வீட்டிலிருக்கின்றபோது பெற்றோர்கள் தொழில் செய்து பிள்ளைகளை வளர்க்கின்றனர்.சமூக ரீதியான கட்டமைப்புகளை சிறிது இறுக்கமாக்குவது தொடர்பில் நீங்கள் யோசித்து செயற்பட வேண்டும். எங்களுடைய சமூகத்தின் இருப்பு என்பது பொருளாதாரமும் கல்வியும் தான்.

புதிய அரசாங்கத்தின் கொள்கையினால் மட்டக்களப்பு மாவட்டம் நன்மையடைகின்றது.  

நாங்கள் இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உற்பத்திக் கிராமங்கள் வரவிருக்கின்றன. மஞ்சள், எள்ளு, உளுந்து, கோழி உற்பத்திகள் போன்றன வரவிருக்கின்றன.நமது மாவட்டம் கிராமிய உற்பத்திக்கு உகந்த மாவட்டமாக இருக்கின்றது. பாரம்பரியமான விடயங்களில் நாங்கள் சில பிழைகளை விடுகின்றோம்.இருக்கின்ற வயல்களை பயன்படுத்தி தரமான நெல்லை விதைத்து அதிக விளைச்சலை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.நாங்கள் கடந்த காலங்களில் பிறரை எதிர்பார்த்திருந்து பின்தங்கிவிட்டோம். இப்போது நாம் தான் அனைத்தையும் செய்யப்போகின்றோம்.

நாங்கள் யாழ்ப்பாணத் தலைவர்களின் கதைகளை கேட்டு துப்பாக்கி ஏந்தி போராடினோம்.எமது மாவட்டத்தின் இளைஞர்கள் பலர் மரணித்திருக்கின்றனர். அவர்களின் நோக்கம் இங்கு வாக்குகளை பெறுவதாகும். சாணக்கியன் போன்றவர்களை பயன்படுத்தி சுமந்திரன் வாக்குகளை பெறவேண்டும்.தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதவியை சுமந்திரன் பெறுவதற்காக அவரை பயன்படுத்துவார்.கட்சிக்குள் பலத்தினை கூட்டுவதற்கே பார்க்கின்றனர்.

இன்று மேய்ச்சல் தரைப்பிரச்சினை பற்றி கதைக்கின்றனர்.அதுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கினை தாக்கல் செய்யுங்கள் சென்று போராடுங்கள்.அதுதான் உங்கள வேலை.நாங்கள் மக்களின் தேவையினை நிறைவேற்றுவோம்.ஆனால் அவர்கள் அதனை செய்வதில்லை எங்களை தாக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்றபோது அதனை யாரும் பெரிதாக விமர்சிக்கவில்லை,அதனை பூசிமெழுகியே எழுதினர்.நல்லிணக்கம் பேசுபவர்களும் ஸஹ்ரான் போன்றவர்கள் செய்த பஞ்சமா பாதக செயல் என சொல்லவில்லை.எந்த ஊடகவியலாளரும் அவருக்கு எதிராக எழுதவில்லை.இன்று அதனுடன் ஒப்பிட்டு சாணக்கியன் பெரிய தலைவராக வரப்பார்க்கின்றார்.

நாங்கள் ஒரு அறிவுரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகமாக,எங்களது கடந்த கால அனுபவங்களை வைத்துக்கொண்டு தற்போதுள்ள அரசாங்கத்தின் கொள்கையின் ஊடாக எமது மக்களுக்கு எதனைப்பெற்றுக் கொடுக்க முடியும் என்பதையே நாங்கள் அவதானம் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஜனாதிபதி கூறிய மகிழ்ச்சியான குடும்பத்தினை வாழவைப்போம் என்னும் கொள்கைக்கு அமைவாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: