30 Oct 2020

மேல்மாகாணத்தில் இருந்து வருகைதந்தவர்கள் உடன் சுகாதாரத் துறையினருக்கு அறிவிக்கவும்.

SHARE


(படுவான் பாலகன்) 

மேல்மாகாணத்தில் இருந்து வருகைதந்தவர்கள் உடன் சுகாதாரத் துறையினருக்கு அறிவிக்கவும்.

மேல்மாகாணத்தில் இருந்து வருகைதந்த படுவான்கரையைச் சேர்ந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார பிரிவினருக்கு தகவலை வழங்கவுமாறும், அவ்வாறு வழங்குவதன் ஊடாக கொரோனா தொற்று சமுகத்திற்குள் பரவுவதை தவிர்க்க முடியுமென அப்பிரதேச அக்கறையுள்ள சமுக அமைப்புக்கள் மக்களிடம் வேண்டியுள்ளன. 

இலங்கையை ஆட்கொண்டுள்ள கொரோனா தொற்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரவியுள்ளது. ஆரம்பத்தில் பேலியகொட மீன் சந்தையில் தொடர்புபட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிசெய்யப்பட்டமையை தொடர்ந்து வாழைச்சேனை பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதேவேளை மட்டக்களப்பின் படுவான்கரைப்பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (30) காலை வரை தொற்றுக்குள்ளான 33பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

படுவான்கரைப்பிரதேசத்தில் உள்ள வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ள இரு தொற்றாளர்களும் கொழும்பில் வேலை செய்து வீடு திரும்பியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேல்மாகாணத்திற்கு வேலைக்கு சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த பலர் மீண்டும் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

படுவான்கரைப் பகுதியைச் சேர்ந்த பலரும் அவ்வாறு வேலைக்கு சென்று திரும்பியுள்ளனர்.  அவ்வாறு திரும்பி வருகைதந்துள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அவ்வாறானவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடனடியாக ஏற்படுத்துவதை தவிர்க்குமாறு வேண்டப்படுவதுடன், அவ்வாறான பிரதேசத்தில் இருந்து வருகைதந்தவர்கள் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், தங்களது பிரிவு சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்தல்களை வழங்குமாறும், தனிமைப்படுத்தல் காலத்தினை பூர்த்தி செய்யும் வரை வெளியில் நடமாடுவதை நிறுத்துமாறும், இதுதொடர்பில் மக்களும் தங்கள் பிரதேச கிராம உத்தியோகத்தருக்கு அல்லது சுகாதார பரிசோதர்களுக்கு அறிவிக்குமாறும் சமுக அக்கறையுள்ள அமைப்புக்கள் அறிவித்தல்களை வழங்கியுள்ளன.

மேலும், தேவையின்றி வெளியில் செல்லுதல், ஒன்றுகூடுதல்களை தவிர்க்குமாறும், ஒருவருடன் உரையாடுகின்ற போது சமுக இடைவெளியை பேணுமாறும், முகக்கவசம் கட்டாயமாக அணிந்து கொள்வதுடன், அதனை முறையாக அணிந்தும் கொள்ளவும். அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளுவதோடு, அணியும் ஆடைகளையும் தொற்றி நீக்கி கொள்ளுமாறும், பிரயாணங்களின் போதும், பொதுசசேவைகளை பெறுவதற்காக செல்கின்றபோதும் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் ஒழுங்குமுறையில் பின்பற்றுமாறும் அக்கறையுள்ள அமைப்புக்கள் மக்களை வேண்டிக்கொண்டுள்ளன.


SHARE

Author: verified_user

0 Comments: