தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியம் மிகப் பெரிய நெருக்கடியொன்றைஎதிர்நோக்கியுள்ளதென்பதைப் புலப்படுத்துகின்றது. போதை, பொய் என்பன நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கப் போவதில்லை. அபிவிருத்தி வேலைவாய்ப்பு என்னும் மாயைகளுக்குள் வீழ்த்தப்பட்ட மக்கள் விரiவில் வெளிவருவார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலில் எமது கட்சிக்கும் எனக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டதைப் பொறுத்தவரையில் கள நிலவரம் ஆரம்பத்தில் சற்றுக் கலங்களாக இருந்தாலும் இறுதி நேரத்தில் மிகவும் தெளிவாகவே இருந்தது. வீடு வீடான பரப்பரையின்போது வீட்டுச் சின்னமென்றால் உள்ளே வாருங்கள் வேறு சின்னங்கள் வரவேண்டாம் என்று பல இடங்களில் சொல்லப்பட்டது. அத்துடன் எங்களுயை பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த நான்கு வருடத்தில் அதிகமான அபிவிருத்திகைளச் செய்திருந்தமையையும் மக்கள் ஏற்றக் கொண்டிருந்தனர். தமிழ்த் தேசியத்தை உச்சரித்தவர்களாக மக்கள் உற்சாகமாகக் காணப்பட்டமை எமக்கு ஊக்கம் அளித்தது.
27.07.2020 தொடக்கம் நடைபெற்ற எமது பொதுப் பரப்புரைக் கூட்டங்களும் அமோகமான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்றது. இத்தகைய களநிலவரத்திலேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நான்கு ஆசனங்கள் கிடைக்கும் என்று நாங்கள் கூறியிருந்தோம். வாக்களிப்புக்கு முந்திய இரவும் வாக்களிப்பின் போதும் இரு குறிப்பட்ட கட்சிகளின் தொண்டர்கள் மக்களை முறையற்ற விதத்தில் ஊக்கப்படுத்தியமையும், பலரைப் பயமுறுத்தியமையும் எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. தேர்தல் கண்காணிப்பு காவல் துறையினருக்கு அறிவித்து இந்நிலையை சீர்திருத்துவதற்குக் கூடியவரையில் முயன்றோம். வாக்களிப்பு வீதமும் அதிகரித்திருந்தது. இதுவும் எங்களுயை முன்னைய நிலைப்பாட்டை நாங்கள் உறுதிப்படுத்தக் காரணமாயிற்று. ஆனால், 06.08.2020ல் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும்போது நிலைமை முரண்பாடாக இருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
திடீரென இந்த மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் விளங்கவில்லை. பிழையான வழியில் திசைதிருப்பப்பட்டிருந்த இரண்டு கட்சிகளின் இளைஞர்கள் தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்டு, வீட்டுக்கு வாக்களிக்க இருந்த பெற்றோரையும் தமது சுற்றத்தினரையும் பயமுறுத்தினார்களா? அல்லது நாலாம் ஐந்தாம் திகதிகளில் இவர்களால் கையாளப்பட்ட பணம் மற்றும் பாணம் தொடர்பான ஊக்குவிப்பு அவர்களைத் திசைதிருப்பியதா? என்று சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் தமிழ்த் தேசியம் மிகப் பெரிய நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளதென்பது புலனாகின்றது. போதை, பொய் என்பன நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கப் போவதில்லை. வழங்கப்பட்ட வாக்குறுதிகளைக் குறித்த இரண்டு கட்சிகளும் நிறைவேற்ற முடியாமற் போகும் போதுதான் மக்களுக்கு உண்மை புலப்படும். அபிவிருத்தி வேலைவாய்ப்பு என்னும் மாயைகளுக்குள் வீழ்த்தப்பட்ட மக்கள் விரைவில் வெளிவருவார்கள்.
அரசினுடைய சிங்கள பௌத்த தேசியவாதத்தினுடைய செயற்பாடுகள் முழுமூச்சோடு நடைமுறைக்கு வரும்போது அவற்றிலிருந்த அவர்களைக் காப்பாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றால்தான் முடியும் என்ற தெளிவு அவர்களுக்குப் பிறக்கும். அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தொண்டர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களை இன்னும் அதிகமாக நெருங்கி அவர்களது சேவைகளைப் பூர்த்தி செய்கின்ற செய்திட்டதினை இப்போதிருந்தே விரைவாக ஆரம்பிக்க வேண்டும். போலிகளின் பின்னே புறப்பட்டுள்ள மக்களை சரியான வழிக்குத் திசைதிருப்பும் செயற்பாடுகளில் உடனடியாகவே இறங்க வேண்டும். தேசியம் தொடர்பான அறிவூட்டலும் இன்னும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment