4 Apr 2020

கட்டுரை: படுவான்கரை மக்களின் நிலை மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகி போய்விடக்கூடாது.

SHARE
(துசா)

படுவான்கரை மக்களின் நிலை மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகி போய்விடக்கூடாது.
மட்டக்களப்பு, படுவான்கரைப்பகுதியில் உள்ள மக்கள், கடந்த கால யுத்தத்தில் அகப்பட்டு பலவற்றை இழந்தவர்கள். இழந்தவைகளாக, பொருளாதாரம், கல்வி, விவசாயம் என பல்வேறு துறைகளை குறிப்பிட முடியும். அதற்கும் அப்பால், உயிரிழப்புக்களையும் ஒவ்வொரு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் படுகொலைகளின் போது சந்தித்தவர்கள். இங்கு மரணங்களை அதிகம் சந்தித்தவர்கள் ஆண்களே. இதனால் பெண்கள் பலர் விதவைகளாகப்பட்டனர். அவ்வாறானவர்கள் தமக்குதெரிந்த தொழில்களை செய்து, குடும்பத்தில் இருக்கின்ற பிள்ளைகளை கரைசேர்ந்தும், கரைசேர்ப்பதற்காகவும் இன்றுவரை போராடிக்கொண்டிருக்கின்றனர்.

தற்கால அசாதாரண சூழலில் அவர்கள் பற்றி பேச வேண்டிய முக்கிய தேவையும் உணரப்பட்டிருக்கின்றது. குடும்பத்தலைவராக ஆண் உள்ள குடும்பத்தினை நடத்துவதிலேயே பல்வேறு சிக்கல்களையும், சிரமங்களையும் எதிர்கொண்டுள்ள நிலையில், குடும்பத்தினது பொறுப்பினை தலைமேல்கொண்டு குடும்பத்தினை வழிநடத்துகின்ற பெண்கள் எவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்வர் என்பதுதான் தற்போதைய சூழலில் ஆராயப்பட வேண்டியதும், அவ்வாறானவர்களுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க ஏற்பாடுகளை செய்யவேண்டியதுமான நிலையில் இருக்கின்றோம்.

அன்றாடம், அரிசி குத்தி விற்றல், மாவிடித்து விற்றல், பெட்டிக்கடைகளை வைத்து நடாத்துதல், வீதியோரங்களில் உணவுப்பண்டங்களை செய்து விற்றல், தவிடுகொண்டு விற்றல் போன்ற தொழில்களில் ஈடுபட்ட பலர், இன்று அத்தொழில்களை செய்யமுடியாதுள்ளனர். இத்தொழில்களை செய்வதன் மூலமாகவே தமது வீட்டுக் கஸ்ரங்களை போக்கிக்கொண்டனர். ஒவ்வொரு நாட்களும் வீட்டு வேலைகளையும் செய்து, தமது தொழில்களையும் செய்து வாழ்ந்தவர்களுக்கு, வெளியில் செல்லமுடியாது, தொழில்செய்யமுடியாது, வீட்டிலே தங்கியிருப்பதானது ஒருவகையில் எந்நாளும் ஓடியவர்களுக்கு ஓய்வினைக்கொடுத்தாலும், மனரீதியாக ஓய்வினைப் பெறமுடியாதவர்களாக உள்ளனர்.

'ஒரு நாள் உழைப்பு, அந்நாள் வீட்டின் செலவினை போக்கும்" என்ற ரீதியில் வாழ்ந்தவர்களுக்கு வாராக்கணக்கில் உழைப்பின்றி இருந்தால், வீட்டின் தற்போதைய நிலையை எவ்வாறு சமாளித்துக்கொள்வார்கள்?. நிவாரணங்கள் மூலமாக ஓரிரு நாட்களை கடத்தலாம், தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்படுமா? அவ்வாறு வழங்கப்படவில்லையெனின், வழங்கிய நிவாரணம் நிறைவுபெற்றதன் பின்பு இவர்களின் நிலை என்னவாகும்? அன்றாட உணவினை மாத்திரம் போக்குவதற்காக நிவாரணம் வழங்கப்பட்டாலும், ஏனைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு என்ன செய்வது?, அன்றாட ஊதியத்தினை நம்பி முன்னர் கடன்பெற்றாலும், எல்லோரும் தொழிலின்றி வீட்டில் இருக்கும் நிலையில் மற்றவர்களிடத்தில் கடன் எவ்வாறு கேட்பது? அவ்வாறு கேட்டாலும் அதனை வழங்குவதற்கு மற்றவர்கள் முன்வருவார்களா? அல்லது அவருக்கு இப்போது தொழிலில்லை நாம் கடனை கொடுத்துவிட்டால் அதனை எவ்வாறு திருப்பி வழங்குவார் என்ற சிந்தனை ஏற்பட்டுவிடாதா? அவ்வாறு ஏற்படாது கொடுத்தால் அவ்வாறானவர்கள் மனிதநேயப் பண்பாளர்கள்.

மிகவும் குறைந்த செலவாக நாளொன்றிற்கு 500ரூபாவினை கருதினாலும், இன்றைக்கு 15நாட்களுக்கு மேலாக தொழிலின்றி வீடுகளிலேயே தங்கி இருக்கின்றனர். அவ்வாறெனின் 7500ரூபாய்க்கும் மேலான பணம் உணவுக்கு மாத்திரம் தேவையாக இருக்கலாம். இதற்கு அப்பால் அன்றாட ஏனைய செலவுகளும் இருக்கின்றன. இந்நிலையில், அரசினால் வழங்கப்படுகின்ற சமூர்த்தி உள்ளிட்ட ஏனைய நிவாரணங்களைப் பெற்றுக்கொண்டாலும், அவ்வுதவிகள் தற்போது கடந்திருக்கின்ற நாட்களுக்கான செலவினையே ஈடுசெய்வதற்கே போதுமானதாகவிருக்கலாம். தற்போதைய அசாதாரண நிலை தொடர்ந்து நீடித்தால் இம்மக்கள் அன்றாட நாட்பொழுதினை எவ்வாறு ஈடுசெய்து கொள்ளப்போகின்றார்கள்?. என்ற வினவும் இருக்கின்றது. 

இதேவேளை பொருட்களின் விலைகளை அதிகரித்துவிற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினாலும், பல இடங்களில் பொருட்களின் விலை அதிகரித்தே விற்கப்படுகின்றன. அவ்வாறான விலைகளில் பொருட்களை வாங்கும் நிலைநீடித்தால் மிகசிக்கனமாக செலவு செய்யும் 500ரூபாய் இரண்டு பொருட்கள் வாங்குவதற்கும் போதுமானதாக இருக்காது. அவ்வாறானின் மக்களின் நிலை இன்னமும் துன்பம் நிறைந்தாகவே இருக்கப்போகின்றது. இவ்விடயங்களை கருத்தில் கொண்டு, இதற்குரிய தீர்வுகள் எட்டப்படாதுவிட்டால், இம்மக்களின் நிலைகூட மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிபோய்விடும்.

எனவே, உதவிகளை மேற்கொள்ளும், தனவந்தர்களும், ஏனைய அமைப்பு மற்றும் நிறுவனங்களும் இனிவர இருக்கின்ற நாட்களையும் கருத்தில்கொள்ள வேண்டும். அந்நாட்களை ஈடுசெய்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் அனைத்து தரப்பினராலும் எட்டப்பட வேண்டியது மிகமிக அவசியமே. 

SHARE

Author: verified_user

0 Comments: