19 Mar 2020

உரிமையோடு மக்கள் எம்மை விமர்சிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதுள்ள அபிமானத்தைக் காட்டுகிறது.

SHARE
உரிமையோடு மக்கள் எம்மை விமர்சிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதுள்ள அபிமானத்தைக் காட்டுகிறது.
தமிழ் மக்களை விட்டுப் பிரிக்க முடியாத அபிமானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு அதனால்தான் மக்கள் எங்களோடு உடனிருந்து உரிமையோடு விமர்சிக்கிறார்கள், அதுதான் எங்கள் பலம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கே. துரைராசசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை 18.03.2020 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் துரைராசசிங்கம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

அவ்விடத்தில் அவர் மேலும் கூறியதாவது,

பொதுத் தேர்தல் என்பது மிகவும் ஜனநாயகப் பண்போடு நடக்க வேண்டிய ஒரு விடயம்.

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையான இந்த சூழ்நிலையில் சரியான முறையிலே இந்த ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடைபெறப் போகின்றதா என்பதிலே சந்தேகம் இருக்கின்றது.

ஜனநாயகப் பாங்கிலே மக்கள் எந்தவிதப் பீதியுமின்றி தங்களின் விருப்பங்களைத் தெளிவு படுத்துவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்ற வேளையில் ஜனாதிபதி அவசரப்பட்டுத்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்கின்றார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும்போதே கொரோனா வைரஸ் தொடர்பான விடயம் உலக நாடுகளிலே இருந்தது.

இது தொடர்பில் இலங்கைக்கும் எச்சரிக்கை இருந்திருந்தது.

ஜனநாயக முறையில் இந்தத் தேர்தலை நடத்துவதற்குச் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம். சர்வதேச கண்காணிப்பாளர்கள் வரக்கூடிய நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸின் அச்சம் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஏன் நாடாளுமன்றத்தை அவசரமாகக் கலைத்தார்.

புதிதாக நாடாளுமன்றத்துக்குச் சென்ற 69 உறுப்பினர்கள் தங்களது ஐந்து ஆண்டுகளை முடிக்காத ஒரு நிலையில் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு தற்போது அவருக்கிருக்கின்ற அதியுச்ச ஏகபோக அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் இந்த நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்கின்றார்.

தற்போதைய நிலையில் வேட்பாளர்கள் எவ்வாறு மக்கள் முன் செல்வது. மக்களைத் திரளாகச் சந்திப்பது, பரப்புரை செய்வதென்பது அறியாத நிலையில் கட்டாயமாகத் தேர்தலை நடத்துவேன் என ஜனாதிபதி ஒற்றைக் காலிலே நிற்கின்றார்.

ஜனாதிபதி இந்த விடயத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். தேர்தலை ஒத்தி வைத்தாலும், நாடாளுமன்றம் இல்லாத நாடாக இது இருக்க முடியாது. எனவே நாடாளுமன்றத்தை திரும்பவும் கூட்டுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எனும் சட்டபூர்வமான நாமத்தின் கீழ் வடக்கு கிழக்கில் ஐந்து மாவட்டங்களிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றோம்.

தற்போது இருக்கின்ற சூழ்நிலையிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமையாக மூன்று ஆசனங்களைக் கைப்பற்றுகின்ற கூட்டமைப்பு இம்முறை நான்கு ஆசனங்களைக் கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இலங்கையின் அரசியல் வரலாற்றின் அடிப்படையில் தமிழர்களுக்கென்று இருக்கின்ற, அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான் என்ற வகையில் தமிழ் மக்கள் பேராதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் தங்கள் அபிமானத்தைக் காட்டும் வண்ணம் வாக்கை வழங்குவார்கள்.” என்றார்.


SHARE

Author: verified_user

0 Comments: