தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி காலமானார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி கதிராமன் தங்கேஸ்வரி தனது 67வது வயதில் காலமானார்.
நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் சனிக்கிழமை 26.10.2019 உயிர் பிரிந்தது.
தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு 2004–2010 வரை நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்தார்.
அதற்கு முன்னர் அவர் மாவட்டக் கலாசார உத்தியோகத்தராகப் பணியாற்றினார்.
2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாததால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதன்பின்னர் ஈபிடிபி கட்சியின் அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் பாரம்பரிய கைத்தொழில்கள் சிறு கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக இவர் 5 வருடங்கள் கடமையாற்றினார்.
களனிப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் சிறப்புப் பட்டம் பெற்ற தங்கேஸ்வரி;. இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வுகளிலும் ஈடுபட்டு சமய நூல்களையும் எழுதியிருந்தார்.
அதேவேளை 1992 – 1995 வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
எழுத்தாளரான இவரின் முதலாவது ஆக்கம் 1972ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரமானது.
இவர் தொடர்ந்தும் ஆய்வுக் கட்டுரைகள், கலாசாரக் கட்டுரைகள், பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றை ஒப்சேவர், தினகரன் வீரகேசரி, தினக்குரல் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள், நினைவிதழ்களிலும் எழுதிவந்தார்.
இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment