மட்டக்களப்பு – கல்வியங்காடு பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தைக் கலைப்பதற்காக, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நால்வரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி உட்பட 2 பெண்களும் 2 ஆண்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு வைத்தியசாலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக மேலதிக படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஏப்ரல் 21ஆம் திகதி சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உடற்பகுதியை நேற்று முன்தினம் கல்வியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள், கல்வியங்காடு மயானத்திலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கல்லடிப் பாலம் வரை நேற்று மாலை பேரணியாக அணிதிரண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டிருந்ததோடு, எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் மூன்று மணிநேரம்வரை இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் இன்று சம்மந்தப்பட்ட தரப்புகள் ஒன்றுகூடி இறுதி முடிவு எடுப்பதாக தீர்மானம் மேற்கொண்டதை தொடர்ந்து, மக்கள் அங்கிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment